பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ வெளியான விவகாரத்தில், அந்த கட்சிக்குள் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் அதிரடியாக நடந்துகொண்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் தொடர்பான வீடியோ வெளியானதால், “தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக” கே.டி. ராகவன் நேற்றைய தினம் தெரிவித்தார்.

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கே.டி. ராகவன், “என்னையும் என் கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது” என்று, குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து, கே.டி. ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ வெளியான விவகாரத்தில், பாஜக வின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “விசாரணை குழு அமைத்து” நேற்று மாலை உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், பெரி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கட்சியின் நிலைபாடு மற்றும் நடவடிக்கை குறித்து, அதில் தெளிவு படுத்தியிருந்தார்.

அந்த அறிக்கையில், “இந்த விவகாரத்தை வெளியிட்ட நபருக்கு உள் நோக்கம் இருக்கலாம்” என்றும், அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். 

அதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக பாஜகவில் இணைந்த ஊடகவியலாளர் மதன், தான் நடத்தி வரும் “மதன் டைரி” என்கிற யூட்யூப் சேனலில், “பாஜகவில் உள்ள சில தலைவர்கள், பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர் என்றும், அதுவும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர் என்றும், இதில் 15 தலைவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும்” குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில், “பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று  பாருங்கள்” என்று,  அந்த வீடியோவை வெளியிட்டார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த பிரச்சனை டெல்லி தலைமை வரை சென்று, பெரிய தலைவலியை உண்டு பண்ணியது. 

அத்துடன், ராகவனுக்கு நெருக்கமானவர் என்று சொந்த கட்சியினரால் அறியப்படும் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி கலிவரதன், கடந்த மாதம் பாலியல் புகாரில் சிக்கினார். 

அவர், மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், 5 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டதாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். 

மேலும், “கலிவரதன் தங்களை ஏமாற்றிவிட்டதாக 2 பெண்கள் சாபம் விடும் ஆடியோவும் வெளியானது. ஆனால், இவர் மீது புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்களே, அடுத்த சில நாட்களில் பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

பாஜகவின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி. ரவியின் கவனத்திற்கு இந்த பிரச்சனை சென்ற நிலையில், அவர் கடுமையாக கொந்தளித்து உள்ளார்.

இது தொடர்பாக கடந்த கடந்த ஜூன் மாதம் நடந்த கூட்டத்தில், “ஒரு தலைவர் மீது மட்டும் சுமார் 134 புகார்கள் வந்துள்ளன என்றும், அவ்வளவு புகார்கள் வந்த தலைவர்கள் மீது பொது மக்கள் மற்றும் சொந்த கட்சியின் நிர்வாகிகள் எந்த அளவுக்கு கோபத்தில் இருந்திருப்பார்கள் என்றும், இது போல பிரச்சனைகளை தவிர்க்க இனி தமிழ்நாடு பாஜக தலைவர்கள் யாரும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்லக்கூடாது” என்றும், கட்டளையிட்டிருந்தார்.

மேலும், “ஊரெல்லாம் விசாகா கமிட்டி அமைத்து, பெண்கள் தொடர்பான பாலியல் புகார் மீது விசாரிக்க வலியுறுத்தி கொண்டிருக்கும் நாமே, நம்மிடையே இருப்போர் சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து, விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்” என்றும், தனது அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“இப்படியே போனால், கமலாலயத்துக்குள் கட்டாயம் விசாகா கமிட்டி ஒன்று அமைத்தாக வேண்டும்” என்றும் சி.டி. ரவி, மிக கடுமையாக கொந்தளித்திருக்கிறார்.

அதே போல், “பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி பாஜகதான் என்ற பிம்பம் தமிழ்நாடு பாஜக தலைவர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சூழலில், அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரே தன் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டது என்பது, அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவதாகவும்” விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் தாமரைகளுக்கு, தாமரை கட்சியிலேயே கவலைக்கிடமான சூழல் ஏற்பட்டிருப்பது, பொது மக்களிடையே, பெரும் கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.