தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மதன் ரவிச்சந்திரன், புதிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில்,
“பாஜக என்னும் பெரிய கட்சியின் எளிய தொண்டன் நான்” என்று,  அண்ணாமலை டிவிட் செய்து மழுப்பி உள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

பாஜகவின் மாநிலச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் விவகாரத்தால் ஆபாச வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர், பாஜகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், “கே.டி. ராகவன் பாலியல் வீடியோவை போடச் சொன்னதே அண்ணாமலை தான்” என்று, மதன் புதிய வீடியோவை நேற்றைய தினம் வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில், “கே.டி.ராகவன் பாலியல் வீடியோ தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை தவறானது என்றும், அவருக்கு நான் வீடியோ பதிவை முழுவதுமாக காட்டினேன் என்றும், அவர் தான் இந்த வீடியோ யூட்யூப்பில் வெளியிடுவதற்கான வழிமுறைகளைச் சொன்னார்” என்றும், தெரிவித்து உள்ளார்.

“ஆனால், அண்ணாமலை தற்போது மாற்றிப் பேசுகிறார்” என்று குறிப்பிட்ட மதன், அந்த வீடியோவில் அண்ணாமலை பேசிய குரல் ஒலிப்பதிவையும் அதில் வெளியிட்டு இருந்தார்.

அதில், “‘நான் டெல்லியைச் சேர்ந்தவர்களைச் சந்திக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறேன். அவர்களிடம் இந்த வீடியோவை காட்டி கட்சியிலுள்ள மோசமானவர்களை நீக்குவோம். இந்த வீடியோவை இரண்டு விதமாகக் கையாளலாம். இந்த வீடியோ வெளியே விட்டு பரபரப்பை ஏற்படுத்தலாம் அல்லது அந்த வீடியோவில் உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கட்சியைச் சரி செய்யலாம்” என்று, கூறியிருக்கிறார்.

அத்துடன், தொடர்ந்து பேசிய பெண்களிடம் “தவறாக நடந்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என்று அண்ணாமலையிடம் வலியுறுத்தியபோது, “எனக்கு அவ்வளவு தைரியம் இல்லை” என்று, அண்ணாமலை தெரிவித்தார் என மதன் விவரித்தார்.

ஊடகவியலாளர் மதன் வெளியிட்ட இந்த பதிவு தான் இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி, அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கையில் சிக்கலை உருவாக்கி இருக்கிறது.

இதனால், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது” என்றும், தமிழக அரசியலில் கருத்துக்களும் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை பட்டும் படாமல் மிகவும் மழுப்பலான கருத்து பதிவிட்டு உள்ளார். அதன் படி, “3 விஷயங்கள் என்னை எப்போதும் வழிநடத்தும். அது தான் என்னை இனியும் வழி நடத்தும்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

அதன் படி,

- வருங்காலத்தில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வேண்டும் என்னும் தொலைநோக்குப் பார்வையில் எனது சிறுபங்கும் பணியும் இருக்கும்.

- எண்ணற்ற மக்களின் தியாகத்தினால் உருவாகிய இந்தப் பெரிய கட்சியின் எளிய தொண்டர் என்ற பெருமை.

- எங்கேயும் எப்போதும் எனக்குத் தேசப் பணிதான் முதன்மையானது என்று, அண்ணாமலை கருத்து தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, “அண்ணாமலையைப் பொறுத்தவரைச் சாதாரணப் பெண்கள் பாஜக தலைவர்களின் காம இச்சைக்குப் பலியாக வேண்டியவர்கள்” என்று, மிகவும் காட்டமாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி எம்.பி., “அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளார்.