அதிமுக, பாஜக வெளி நடப்பு செய்த போதும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான பிரதமர் மோடி அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால், தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் என்றும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தி, டெல்லியில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக, விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சு வார்த்தைகளும் அடுத்தடுத்து தோல்வியிலேயே முடிந்தன.

ஆனால், “எக்காரணம் கொண்டும் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற மாட்டாது” என்று, மத்திய அரசும் விடாப்பிடியாக உள்ளது.

இந்த நிலையில் தான், மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழக சட்டசபையில் இன்று அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், தமிழக சட்டப் பேரவையில் இருந்து பாஜக மற்றும் அதிமுக வெளியேறியது. ஆனாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின், “ 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்றும், இந்த சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பது போல இருப்பதாக விவசாயிகள் கவலைப்படுகிறார்கள் என்றும், அதனை எதிர்த்து போராட்டமும் நடைபெற்று வருகிறது” என்றும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் “விவசாயிகளின் வாழ்வு செழிக்க 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுவதே சிறந்த வழி” என்றும், கூறினார்.

எனினும், “தமிழக அரசுக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒருமித்த ஆதரவு தெரிவித்ததால், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

இதனிடையே, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.