மத்திய அரசு கொண்டு வந்த , மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த இருக்கிறார்கள். புதிய வேளாண் சட்டங்களில் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளில் இருக்கும் முரண்கள்  குறித்து  பேசுகிறார் தமிழக விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம்.


புதிய வேளாண் சட்டங்களில் இருக்கும் முக்கிய பிரச்சனைகள் என்னென்ன?


மூன்று சட்டங்களுமே விவசாயிகளுக்கு பிரச்சனைகளை கொடுக்க கூடியது தான். அதில் முக்கியமான பிரச்சனை, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம். காரணம், இந்த சட்டம், உணவு பாதுக்காப்பின்மையை உருவாக்குகிறது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும்.. அது அத்தியாவசிய பொருட்கள் இல்லை என்று மத்திய அரசு இந்த சட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் எவ்வளவு வேண்டுமானலும் ஸ்டாக் வைத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இப்படி ஸ்டாக் வைத்துக்கொள்ள அரசு அனுமதித்தால், ஒரு செயற்கையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, உணவு பொருட்களின் விலை உயரும். மறுபக்கம் அரசு கொள்முதலும் செய்யாது என்பதால், ரேசன் கடைகளும் இருக்காது. 


ரேசன் கடைகளும் இருக்காது, வெளிமார்க்கெட்டிலும் அதிக விலை இருந்தால் அடிதட்டு மக்கள் பட்டினியில் இறந்துபோவார்கள். இதுபோன்ற செயற்கை பற்றாக்குறை உண்டானதால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துபோன வரலாறு இந்தியாவில் உண்டு. 


உணவு பாதுகாப்பு என்பது நமக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், நமக்கு வேண்டிய அளவில் கிடைக்கனும் என்பது தான். ஒரு நாள் சாப்பிட்டு விட்டு , இரண்டு நாள் பட்டினிக் கிடப்பது எல்லாம் உணவு பாதுகாப்பா? உணவு பாதுகாப்பு மக்களோட உரிமை. இந்த சட்டங்கள் விவசாயிகளின் பிரச்சனை மட்டும் இல்லை. மக்களின் உரிமை பிரச்சனை.


குறைந்தபட்ச ஆதார விலை தொடரும், மண்டி விலைகளில் மாற்றம் இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் சட்டங்கள் குறித்து பலமுறை விளக்கம் கொடுத்து இருக்கிறார். இதை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்கவும் தயார் என்கிறார். இதன் பிறகும் போராட்டம் தொடர என்ன காரணம்?


குறைந்தபட்ச ஆதார விலை என்று சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இதை சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்ட போது கூட பிரதமரும், வேணான் அமைச்சரும் எந்த பதிலும் சொல்லவில்லை. போராட்டம் தொடங்கியதும்  இதுபோன்ற வெற்று வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். இந்த வாக்குறுதிகளுக்கு எல்லாம் எந்த சட்டபூர்வமான உத்திரவாதமாவது இருக்கா?


 குறைந்தபட்ச ஆதார விலை தொடர்கிறது என்று பிரதமர் சொல்லி இருக்கிறார், வேளாண் அமைச்சர் எழுதிகொடுத்து இருக்கிறார் , அமித்ஷா உத்திரவாதம் கொடுத்து இருக்கிறார் என்று கூறிக்கொண்டு..   ஒரு வேளாண் விலை வியாபாரியிடம், ஒரு பொருளை விற்க போனால்.. அந்த வியாபாரி , ‘போயி பிரதமரிடம் விற்றுக்கொள் என்பார். அதற்காக தான், மத்திய அரசு விவசாயிகளுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு ஒரு சட்ட பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்கிறோம்.


எழுதிக்கொடுக்கிறோம், உத்திரவாதம் கொடுக்கிறோம் என்பவர்களுக்கு அதை சட்டமாக இயற்ற என்ன கஷ்டம் இருக்க போகிறது? இதுபோன்ற வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை அப்படியே மறந்து போதுவது அரசியல் தலைவர்களுக்கு வழக்கமான ஒன்று. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதை எண்ணி கூச்சமோ, வெட்கமோ படாத அரசாங்கம் இது. இதை சட்ட பாதுக்காப்பு இல்லாமல் வெற்று வாக்குறுதியை வைத்து என்ன செய்ய முடியும்..? 

இரண்டு ஆண்டுகள் வரை சட்டத்தை நிறுத்தி வைக்க தயார் என்று  மத்திய அரசு தெரிவித்து இருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல்? 


முன்னதாக, இந்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேட்டப்போது மத்திய அரசு அதை மறுத்து விட்டது. இப்போது நிறுத்தி வைக்க தயார் என்று சொல்லக் காரணம்.. குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியின் அறிவிப்பை பார்த்து மத்திய அரசு மிரண்டு இருக்கிறது. இந்திய வரலாறு காணாத பேரணி இது. இதனால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்க தயார் என்கிறார்கள். அதனால் தான், இதை விவசாயிகள் மறுத்துவிட்டோம்.


பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை,  ஒரு அறையில் மூன்று அமைச்சர்கள் சேர்த்து நிறுத்திவைப்போம் என்று சொல்வது, சட்டப்படி சாத்தியமில்லை. இயற்றிய சட்டத்தை  நிறுத்தி வைக்க வேண்டும் என்றால், மீண்டும் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றித் தான் நிறுத்தி வைக்க முடியும். அதனால் உச்சநீதிமன்றத்துக்கு எழுதி தருகிறோம். விவசாயிகளுக்கு எழுதி தருகிறோம் என்று மத்திய அரசு சொல்வது எல்லாம்  ஏமாற்று வேலை. 

சட்டத்தை நிறுத்தி வைக்க முடியாது தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு போட்டுக்கொள்ளுங்கள் என்று பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளாரே..?


மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டத்தையும் அமல்படுத்துவதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க மட்டும் தான் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. இந்த மறு உத்தரவு என்பது நீதிபதிகளின் கையில் தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் ஒரு மறு உத்தரவை, நீதிபதிகளால் போட முடியும் தானே? விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு  கொண்டு வர,  உச்சநீதிமன்றத்தை ஒரு கருவியாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. 


உச்சநீதிமன்றம் அமைத்திருக்கும் குழுவை விவசாயிகள் பொருட்படுத்தியாக தெரியவில்லையே?
உச்சநீதிமன்றம் அமைத்திருக்கும் குழுவில், இருப்பவர்கள் நான்கு பேருமே இந்த சட்டத்தை ஆதரிப்பவர்கள். ஒருவர், இந்த சட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர், மற்றொருவர் இந்த சட்டத்துக்கு வேளாண் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தவர், இன்னொருவர் சட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்...


இப்படியானவர்கள் கொண்ட குழுவிடம், எங்கள் பிரச்சனையை குறித்து எங்கே பேசுவது? இந்த குழு மூலமா விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்க போகிறது? உண்மையிலே உச்சநீதிமன்றதுக்கு விசாயிகள் மேல்  அக்கறை இருந்தால், இந்த சட்டத்தை ஆதரிப்பவர்கள் 2 பேர், எதிர்ப்பவர்கள் 2 பேர், நடுநிலையாளர்கள் 2 பேர், வல்லுநர்கள் 2 பேர் கொண்ட குழுவை தானே அமைத்து இருக்க வேண்டும்?


மேலும் உச்சநீதிமன்றமே ஒரு குழுவை அமைத்துவிட்டு, அவர்களே அந்த குழுவின் முடிவுக்கு எதிரான ஒரு தீர்வை கொடுக்க முடியுமா? போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் சேர்ந்து நாடகம் நடத்துக்கிறார்கள்.


உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு துணை போவதாக  குற்றச்சாட்டு சொல்கிறீர்கள்? ஆனால் இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக, மத்திய அரசை கண்டித்து கடுமையான விமர்சனத்தை தானே உச்ச நீதிமன்றம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது? 


 உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஓபன் கோர்ட்டில் பேசும் பொழுது நன்றாக  தான் பேசுவார்கள். ஆனால் தீர்ப்பு எழுதும் பொழுது தான், எதிராக எழுதுவார்கள். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. பாபர் மசூதி வழக்கில், மசூதியை இடித்தது தவறு. ஆனால் இடத்தை இந்துக்களுக்கு கொடுங்கள் என்று சொன்னதே  இதற்கு மிகச்சிறந்த உதாரணம். 


யாரையும் ஆலோசிக்காமல்..உங்கள் இஷ்டத்துக்கு சட்டம் இயற்றுவீர்களா..?என்று மத்திய அரசை எல்லாம் கேட்பார்கள் தான். ஆனால் தீர்ப்பு எழுதுவது மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும்.  அதனால் தான் விவசாய சங்கங்கள் யாரும் உச்சநீதிமன்றத்தை நம்ப மறுக்கிறோம். சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு. அவர்களுடனே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்திக்கொள்கிறோம். இடையில் யாரும் வேண்டாம்.

உச்சநீதிமன்றம், இந்த சட்டத்துக்கு எதிரான வழக்குகளை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. பிறகு எப்படி உச்சநீதிமன்றத்தை தவிர்க்க முடியும்?


எந்த வழக்குகளை அவர்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார்கள்? விவசாயம் என்பது மாநில உரிமைகளுக்கு உட்பட்டது. அதில் மத்திய அரசு எப்படி சட்டம் இயற்ற முடியும்? என்ற வழக்கு ஒன்று இருக்கிறது மற்றும் பாராளுமன்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு இந்த சட்டம் நிறைவேற்றபடவில்லை என்ற வழக்கு இருக்கிறது. இதுபோன்ற முக்கிய வழக்குகளை கவனமாக தவிர்த்துவிட்டு... விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறா இருக்கு என்ற வழக்கை எடுத்து விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றத்தை நாங்கள் எப்படி நம்ப முடியும்?

டிராக்டர் பேரணிக்கு பிறகு மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை தொடருமா அல்லது போராட்ட வடிவத்தில் மாற்றம் இருக்குமா? 
டிராக்டர் பேரணிக்கு பல இடங்களில் அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. டிராக்டர் வைத்திருக்கும் விவசாயிகள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். ஒருவேளை பேரணியில் அடக்குமுறை செய்ய நினைத்தால், அவர்கள் தலையில் அவர்களே மண் அள்ளிப்போட்டுக்கொள்வது போல் தான் ஆகும்.

பல லட்சக்கணக்கான விவசாயிகள் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்தும் போது, பேசி தீர்ப்பதை தவிர மத்திய அரசுக்கு வேற என்ன வழி இருக்கிறது? இந்த போராட்டத்தை வெற்றிக்கரமாக நடத்தி முடித்த பிறகு அடுத்த நடவடிக்கையை குறித்து அறிவிப்போம்.