பிபின்ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு!

பிபின்ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு! - Daily news

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

bipin rawat

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர் கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். 

தொடர்ந்து  அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.  இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தரைப்படை ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம், சீக்கியம் ஆகிய 4 மதத்தலைவர்கள் தங்களது மத நம்பிக்கைகளின் படி ராணுவ வீரர்களின் உடல்களுக்கு சடங்குகள் செய்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. கோவை சூலூரில் இருந்து புறப்பட்ட விமானம் தலைநகர் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தை நேற்று இரவு 7.35 மணிக்கு சென்றடைந்தது. அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த வீரர்கள் விமானத்தில் இருந்து உடல்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வந்து வரிசையாக அடுக்கி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து பிபின்ராவத் உள்ளிட்டவர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ராணுவ தளபதி நரவனே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி சவுத்திரி, மத்திய பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், மற்றும் ராணுவ உயர்அதிகாரிகளும், தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில்  ஹெலிகாப்டர் விபத்தில் பிபின்ராவத், அவரது மனைவி மற்றும் லக்பிந்தர்சிங் விட்டர் ஆகிய 3 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. எனவே 3 பேரின் உடல்கள் மட்டுமே அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், மற்றவர்களின் உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு பிறகே ஒப்படைக்கப்படும் என்று இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலம் விமானநிலையத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பிபின்ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் டெல்லி காமராஜ் மார்க் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதி ஊர்வலம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள சுடுகாட்டில் முழு ராணுவ மரியாதையுடன் பிபின்ராவத்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராணுவத்தினர் செய்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment