மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு!
By Aruvi | Galatta | Jul 04, 2020, 05:24 pm
மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு முடக்கத்தை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட 5 ஆம் கட்ட ஊரடங்கின் போது, பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் சற்று வேகம் எடுத்தது. இதனால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மதுரையிலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி முதல் நாளை வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அத்துடன், குறிப்பிட்ட சில பணிகளுக்கு, குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
குறிப்பாக, ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் உள்ள கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
உணவகங்களில் பார்சல் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும், தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. அம்மா உணவகங்கள், பால் கடைகள், மருந்தகங்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்பட்டன. ரயில் மற்றும் விமான பயணிகள் இ பாஸ் பெற்று,
வாகனங்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இப்படியாகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த முழு ஊரடங்கு நாளை உடன் முடிவடைய உள்ள நிலையில், மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு முடக்கத்தை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முழு முடக்கம் ஜூலை 6 ஆம் தேதி முதல், ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழு ஊரடங்கு காலத்தில் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு இரு முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மதுரையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அதே நேரத்தில், மதுரையில் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு சிகிச்சை பெற்று வந்த 4 பேர், இன்று அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மதுரையில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3473 ஆக உயர்ந்திருந்தது. அத்துடன், மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக இருந்தது. இந்நிலையில், அங்குள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு சிகிச்சை பெற்று வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவரும், செல்லூர் பக்கதியை 57 வயது பெண் ஒருவரும், அதே பக்கதியைச் சேர்ந்த 39 வயது ஆண் ஒருவரும், காரியாபட்டியைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர் என இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால். மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது. இது வரை மதுரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 2,405 பேர் மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகச் சிறப்பு மருத்துவக் குழு நாளை மதுரை வர உள்ளதாக” அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். “மதுரையில் உள்ள 22 கொரோனா பாதுகாப்பு மையங்களில் மொத்தமாக 3,030 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் ஜூலை 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில், எந்த வித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நடை முறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி, நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
நாளை முழு ஊரடங்கு காரணமாக, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரை, பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று பெட்ரோலிய வணிகர் சங்கத் தலைவர் முரளி கூறியுள்ளார்.
எனினும் ஆம்புலன்ஸ், பால் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை வாகன தேவைகளுக்காக மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.