தமிழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ள நிலையில், 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி மற்றும் 4 மாவட்டங்களில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாகச் சற்று குறைந்து வரும் நிலையில், கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், ஏற்கனவே உள்ள ஊரடங்கை மேலும் ஒரு சில தளர்வுகளோடு வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 

அதன் படி, தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில், 3 வகையாக ஏற்கனவே பிரிக்கப்பட்டு தளர்வுகளை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்த நிலையில், அதே 3 வகையில் மாவட்டங்களைப் பிரித்து, தமிழக அரசு தற்போதும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

முதல் வகை

இதில், முதல் வகையில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த முதல் வகையில், இடம் பெற்றுள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இபாஸ், இபதிவு இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 முதல் 9 வரை நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

2 வது வகை

இந்த 2 வது வகையில் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன.

அதன் படி, பாத்திரக்கடைகள், ஃபேன்சி, அழகு சாதனப் பொருள், ஃபோட்டோ, வீடியோ கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- மாவட்டத்திற்குள் பொதுப் பேருந்து போக்குவரத்திற்கு 50 சதவீத பயணிகளுடனும், மாவட்டங்களுக்கு இடையே விதிகளுக்கு உட்பட்டு 50 சதவீத  பயணிகளுடன் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சாலையோர உணவுக் கடைகள், பார்சல் சேவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

3 ஆம் வகை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மட்டுமே இதில் இடம் பெற்று உள்ளன. 

இந்த 3 வகையில், குறிப்பிட்ட இந்த 4 மாவட்டங்களுக்கும் கிட்டதட்ட முழுமையான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

அதன் படி, இந்த 4 மாவட்டங்களிலும், திரையரங்குகளில் வட்டாட்சியர் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

இனிப்பு, கார வகை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல், இரவு 9 மணி வரை செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் காலை 6 முதல் 9 வரை மட்டும் நடைபயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.