தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், சில நாட்களாக நோய்ப் பாதிப்பை விடவும் மோசமாக அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்கள், காவலர்களின் நடவடிக்கைகள்தான் தமிழக மக்களைப் பீதியடையச் செய்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் கடந்த வாரங்கள் முழுக்க, காவல்துறையின் வன்முறை குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக உறுப்பினர் ஒருவரின் கொலை அரங்கேற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. செங்கல்பட்டின் செய்யூரை அருகே உள்ள நயினார்க் குப்பத்தைச் சேர்ந்த அருண் என்பவரின் தங்கை சசிகலா கடந்த ஜூன் 24-ம் தேதி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அவரை தற்கொலைக்குத் தூண்டியதாகச் சொல்லி, திமுகவின் நிர்வாக பொறுப்பிலிருக்கும் தேவேந்திரன் மற்றும் கட்சி சாரா நபரும், தேவேந்திரனின் சகோதரருமான புருஷோத்தமன் ஆகிய இருவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லி, அதை வழக்காகத் தொடர்ந்தது, அவரின் சகோதரர் அருண். குற்றம் சாட்டப்பட்ட தேவேந்திரனும் புருஷோத்தமனும் அந்த பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்து அவரை மிரட்டி, பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும், வீடியோவை இணையதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி வந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல வருடங்களாகவே இவர்கள் சசிகலாவைத் துன்புறுத்தியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோகம் என்னவெனில், இவர்கள் இருவரும்கூட, சசிகலாவுக்கு அண்ணன் வகை உறவுதான் எனக் கூறியுள்ளனர் ஊர்மக்கள்.

பல ஆண்டுகளாகவே இவர்கள் சசிகலாவின் திருமண ஏற்பாடுகளைத் தடுத்ததாகவும், சசிகலா தற்கொலை செய்து கொண்ட நாளன்று அவர் வீட்டுக்குச் சென்று இவர்கள் சண்டை போட்டதாகவும் கூறியுள்ளார் அருண். திட்டும்போது, `மாப்பிள்ளை பார்த்தால், நீ தூக்குப்போட்டு செத்துப்போ' என சொல்லி, சசிகலாவை மோசமாக அடித்ததாக வழக்குப்பதிவில் சொல்லப்பட்டுள்ளது. இப்போதும்கூட, மகளுக்குத் திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க கடந்த ஜூன் 24-ம் தேதி தாய் வெளியூர் சென்றிருந்த வேளையில்தான் இந்த தற்கொலை சம்பவம் நடந்தேறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் காவல்துறை பதிந்த வழக்கில் வேலைக்குச் சென்றிருந்த சூழலில்தான் சசிகலா சேலையில் தூக்கிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

நடந்த நிகழ்வுகள் அனைத்தும் தனக்குச் சந்தேகத்தைத் தருவதாகக் கூறி இருவர் மீதும் வழக்குப் பதிந்திருந்தார் அருண். முதலில், இவர்கள் திட்டி சண்டையிட்டதால், தங்கை தற்கொலை செய்திருக்கக்கூடும் என நினைத்தார் அருண். இருப்பினும், குடும்ப சண்டை காரணமாகவே தங்கை தூக்கிட்டுக்கொண்டதாகச் சொல்லப்பட்டதால், அப்போது அதை அவர் பெரிதாக நினைக்கவில்லை. இருப்பினும், அருணின் சந்தேகம் வலுக்கவே, இப்போது அவர்களே சசிகலாவைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டு, பின் நாடகம் ஆகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர் செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உள்ளார். அதில், தனது தங்கையின் சடலத்தைத் தோண்டி, மீண்டும் அவருக்குப் பிரேதப் பரிசோதனை செய்து இது கொலையா, தற்கொலையா என்பதை மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார் அருண். மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யும் வரை சுடுகாட்டிலிருந்து செல்ல மாட்டேன் என சசிகலாவை அடக்கம் செய்த இடத்திலேயே அமர்ந்திருந்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் அருண். சசிகலாவின் உடலை, அவர் இறந்த தினமன்று மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அன்றே அடக்கமும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்னர்தான் சிறுமி ஜெயப்பிரியா பாலியல் வன்கொடுமைக்குப் பலியாகியிருக்கும் சூழலில், இப்போது மற்றொரு பாலியல் கொடுமையும் தெரியவந்துள்ளது, தமிழக மக்களை வேதனையடைய வைத்திருக்கிறது. ட்விட்டரில் #JusticeforSasikala என்ற ஹேஷ்டேக் இப்போது ட்ரெண்ட் ஆக வரும் நிலையில், இந்த சம்பவத்தின் தேவேந்திரன் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கட்சியினரின் நிலைப்பாடு என்ன என்பது சரியாகத் தெரியவரவில்லை. ஹேஷ்டேக் ட்ரெண்டை தொடர்ந்து, சமூகவலைத்தளத்தில் பலரின் கவனத்தையும் இது பெற்றுவருகிறது. இதிலாவது முழுமையாக நீதி நிலைநாட்டப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- பெ.மதலை ஆரோன்