“ஆட்சிக்கு வந்து என்ன செய்தோம்”  என்று, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அத்துடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்துக்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்படும் என்றும் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை ஆற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் கொரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில், கொரோனா தொற்று தடுப்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக நடத்தப்படும் அனைத்து சட்டப்பேரவைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு எனது அழைப்பினை ஏற்று வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும், முதற்கண் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், “அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வெளிப்படையான ஆலோசனை நடத்தவே இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன் என்றும், முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் முன்பே கொரோனா தடுப்பு தொடர்பாக அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினேன்” என்றும், குறிப்பிட்டுப் பேசினார். 

“நான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றில், 'கொரோனாவால் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக நான்காயிரம் ரூபாய், 2 தவணையாகக் கொடுக்கப்படும்' என்ற அரசாணையும், அதில் ஒன்று” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“அதில், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் சிகிச்சை செலவினை அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டது” என்றும், குறிப்பிட்டார். 

அத்துடன், “கடந்த சில நாள்களாக எடுக்கப்பட்டுள்ள அரசு நடவடிக்கைகள் குறித்து உங்கள் முன் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆக்ஸிஜன் இருப்பு, படுக்கை வசதி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக 'வார் ரூம்' அமைத்தது, ஆக்ஸிஜன் இருப்பைக் கண்காணிக்க 4 ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடிவரும் முன்கள வீரர்களான தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார். 

“கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், தடுப்பூசி தட்டுப்பாட்டைக் குறைக்க உலகாளவிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது என்றும், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆக்ஸிஜன் கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ரெம்டெசிவிர் மருந்து மாநிலம் முழுவதும் பல நகரங்களில் விநியோகம் செய்யப்படுகிறது என்றும், படுக்கைகள் தட்டுப்பாட்டைப் போக்க பல மாவட்டங்களில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக சென்னை வர்த்தக மையத்தில் புதிதாகப் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன” என்றும், முதலமைச்சர் தெரிவித்தார். 

“ஆர்டிபிசிஆர் சோதனையைத் தனியார் மேற்கொள்வதற்கான அனுமதியும், அதன் கட்டணத்தைக் கண்காணிக்க விலை நிர்ணயக் குழு கூட்டத்தை நடத்தவும் ஆணை பிறப்பித்துள்ளேன் என்றும்; சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவித்துள்ளேன்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“முழு ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், இந்தத் தளர்வுகளைப் பயன்படுத்தி சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர் என்றும், இதன் காரணமாக இந்தத் தளர்வுகளைத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமா அல்லது சில மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்று உங்கள் ஆலோசனைகளையும், உங்களின் தொகுதிகளின் நிலவரம் குறித்த கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.