சென்னையில் வீட்டை விட்டு ஓடிய மகள், தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை 30 ரவுடிகளுடன் சென்று, வீட்டை சூறையாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த முரளி என்பவர், அங்குள்ள 104 வது வார்டு திமுக துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு 19 வயதில் மகள் உள்ளார்.

இதனிடையே, அந்த இளம் பெண் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான சக்திவேல் என்ற இளைஞனை காதலித்து வந்ததாகத் தெரிகிறது. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக, காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பேசாமல் தவித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், இருவரும் எப்படியோ தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாகத் தெரிகிறது.

அதன்படி, கடந்த 10 ஆம் தேதி மாலை முரளியின் 19 வயது மகள், கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும், அந்த இளம் பெண் வீடு திரும்பவில்லை. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த முரளி, தன் உறவினர்களுடன் அந்த பகுதி முழுவதும் தன் மகளை தேடி அலைந்து உள்ளார். அத்துடன், மகளின் தோழிகளிடமும் தொலைப்பேசியின் மூலம் விசாரித்து உள்ளார். இப்படி எங்குத் தேடியும் மகள் கிடைக்காத நிலையில், வேறு வழியின்றி, அங்குள்ள வேப்பேரி காவல் நிலையத்தில் தந்தை முரளி புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது, “வீட்டை விட்டு சென்ற அந்த இளம் பெண், அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்ட தகவல்” கிடைத்துள்ளது. இதனையடுத்து. இளம் பெண்ணின காதல் திருமணம் பற்றிய விசயத்தை, போலீசார் அந்த பெண்ணின் தந்தை முரளியிடம் தெரிவித்தனர். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை முரளி, பயங்கர ஆயுதங்களுடன் சுமார் 30 ரவுடிகளை அழைத்துக்கொண்டு, சக்திவேலின் உறவினரான அம்சவல்லி என்பவரின் வீட்டிற்குச் சென்று உள்ளார். அங்கு, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், தொலைக்காட்சி, பீரோ உள்ளிட்ட வீட்டில் இருந்த அனைத்து விதமான பொருள்களையும் அடித்து நொறுக்கினர். 

மேலும், அந்த வீட்டில் இருந்து சக்திவேலின் உறவினரான அம்சவல்லியின் கழுத்தில் கத்தியை வைத்து, “எனது மகள் எங்கே?” என்று, பயங்கரமாக மிரட்டி உள்ளனர். அத்துடன், “சக்திவேல் எங்கள் கையில் கிடைத்தால் அவ்வளவு தான், அவனை கொன்று விடுவோம்” என்று, அவர்கள் மிரட்டி விட்டு
சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அம்சவல்லி, இது தொடர்பாக அங்குள்ள வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு தீவு செய்த வேப்பேரி போலீசார், வீட்டை அடித்து உடைத்ததாக தினேஷ் குமார், அன்பரசன், பிரபாகரன், நந்தா, சத்தியமூர்த்தி, மனோஜ்குமார், பிரபாகரன் ஆகிய 7 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள திமுக துணைச் செயலாளர் முரளி உள்பட 4 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.