கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் பொது முடக்கம் அமலில் உள்ளது. பாதிப்புகள், மக்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக கொண்டு பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதும், தளர்வுகள் அறிவிக்கப்படுவதும் தொடந்து நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, நேற்றைய தினம் தமிழகத்தில்,அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் விவாதிக்கப்பட்டு, விவரங்கள் வெளியிடப்பட்டன. இதேபோல, ஆந்திராவிலும் அம்மாநிலத்துக்கான தளர்வுகள் குறித்து அம்மாநில முதல்வர் விவாதித்தார். முன்னதாக பள்ளிகள் திறப்பது குறித்து, காணொலிக் காட்சி மூலம் அதிகாரிகளிடம் நேற்று மாலை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்திற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :

``கொரோனா ஊரடங்குக்கு பின் அக்டோபர் 5ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. அன்றைய தினமே மாணவர்களுக்கு 3 செட் சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள், சாக்ஸ், பெல்ட், பள்ளிப் பை ஆகியவற்றை வழங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது அதிகாரிகளுடனான ஆலோசனையில், பள்ளிகளை மீண்டும் நவம்பர் 2ம் தேதி முதல் திறக்கலாம் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதேசமயம் முன்பே திட்டமிட்டப்படி அக்டோபர் 5ம் தேதி பாடப் புத்தகம் மற்றும் பள்ளி சார்ந்த உபகரணங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும்" என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதற்கு முன்பும், தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கும் முன்பும் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர் வல்லுநர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முதல்வர் பழனிசாமி அறிவித்து வருகிறார்

அந்த வகையில், நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி பள்ளிகள் திறப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களுக்கு தீர்வுக்காண பள்ளிக்குச் செல்லலாம் என்று அனுமதி அளித்து பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, அன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்படாது என தெரிகிறது.

முன்னதாக, செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில், தமிழகத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, அவர்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக தெரிவித்த தமிழக அரசு, இதற்கான அரசாணையை கடந்த 24ஆம் தேதி வெளியிட்டு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படாது என்ற இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, பள்ளி திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், பள்ளிகள் திறப்பு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தது இந்த சமயத்தில் நினைவுகூரத்தக்கதாக உள்ளது