சென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று தற்போது வரை தமிழகம் முழுவதும் 923 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய மார்ச் மாதம் முதல் தற்போது வரை அதன் தாக்கம் சற்றும் குறையாமல், நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதன் காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, சென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

மேலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் தலா 4 பேர் என, நேற்று இரவு முதல் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். அதேபோல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். 

அத்துடன், சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரும், இன்று கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே சென்னை காவல் ஆய்வாளர் பால முரளி உயிரிழந்த நிலையில், தற்போது சென்னை காவல் துறையில் கொரோனாவுக்கு 2 வது காவலர் பலியாகி உள்ளார்.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை சமாளிக்கும் வகையில், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள அரசு மருத்துவமனைகளில், பைப் லைன் மூலம் ஆக்சிஜன் வசதி செய்து, தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் மட்டும் 11 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 75 கோடி ரூபாய் செலவில் ஆக்சிஜன் வசதி செய்யப்படுகிறது என்றும், தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் விவரங்களைச் சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதன்படி, சென்னையின் 4 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில், அதிக பட்சமாக அண்ணா நகரில் 3,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கோடம்பாக்கத்தில் 2322 பேரும், ராயபுரத்தில் 2309 பேரும், தேனாம்பேட்டையில் 2051 பேரும், தண்டையார்பேட்டையில் 1838 பேரும், அடையாறு பகுதியில் 594 பேரும், திரு.வி.க.நகரில் 1771 பேரும், வளசரவாக்கத்தில் 1175 பேரும், அம்பத்தூரில் 1020 பேரும், மாதவரத்தில் 899 பேரும், ஆலந்தூரில் 800 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 108 லிருந்து 143 ஆக உயர்ந்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

அதேபோல், அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 50 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அண்ணா நகர் மண்டலத்தில் 39 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையைத் தாண்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாவட்டத்தில் இதுவரை 92 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்ற பரவி உள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3975 ஆக உயர்ந்துள்ளது. 

மதுரை மாநகரில் 3 காவல் ஆய்வாளர்கள் உள்பட இன்று 206 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று பரவி உள்ளது. இதனால், மதுரை மாவட்டத்தில் இதுவரை 142 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,763 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை மதுரையில் 32 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 817 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,708 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலத்தில் இன்று ஒரே நாளில் அதிக பட்சமாக 191 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பாக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 971 ஆக உயர்ந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வேலூரில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1553 ஆக உயர்ந்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 775 ஆக உயர்ந்துள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், 214 தீட்சிதர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.