காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளை, தாய் உட்பட 4 பேர் சேர்ந்து கொலை செய்து ஏரியில் வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி 
உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா துமகுண்டே கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான சந்தியா, ஆந்திர மாநிலம் இந்துப்பூரை சேர்ந்த ஒரு இளைஞரை, தனது 15 வயது முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞர் வேறு சாதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் சமீபத்தில் சந்தியா வீட்டிற்குத் தெரிய வந்த நிலையில், சந்தியாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கோபமடைந்த சந்தியா, தன் வீட்டை விட்டு வெளியேறி இந்துப்பூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து, 18 வயது பூர்த்தியாகத தனது பெண்ணை, குறிப்பிட்ட அந்த இளைஞர் கடுத்தி சென்றுவிட்டதாக, சந்தியாவின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன், இளம் பெண் சந்தியாவை மீட்டு அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தியாவுக்கு அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி உள்ளனர். 

ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த சந்தியா, “ காதலனைத் தான் திருமணம் செய்வேன்” என்று விடாப்பிடியாக அடம் பிடித்துள்ளார். ஆனால், அதற்கு அவரின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமல், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சந்தியா தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார்.

மகளின் உறுதியைப் பார்த்து கடும் கோபம் அடைந்த சந்தியாவின் தாய் ராமாஞ்ஜுனம்மா, பெற்ற மகள் என்றும் கூட பாராமல் சந்தியாவை ஆணவக்கொலை செய்ய முடிவு செய்து உள்ளார். இது குறித்து, தனது மற்றொரு மகள் மற்றும் அவரது கணவர், மகனிடம் கூறியுள்ளார். இதற்கு அவர்களும் ஒப்புக்கொண்ட 

நிலையில், பக்கத்துக் கிராமமான புலிகுண்டேவிற்கு சந்தியாவை பொய் சொல்லி அழைத்துச் சென்று, அங்கு சந்தியாவின் கழுத்தை 4 பேரும் சேர்ந்து நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளனர். 

சந்தியாவை கொலை செய்த பின்னர், அவரது உடலில் பெரிய கல்லைக் கட்டி அந்த பகுதியில் உள்ள ஏரியில் வீசி விட்டு வீடு திரும்பி உள்ளனர். 

இதனையடுத்து, அந்த ஏரியில் கடந்த 23 ஆம் தேதி இளம் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்த வந்த போலீசார், உடலை மீட்டனர். அப்போது, அவரது உடலில் பெரிய கல் கட்டப்பட்டு இருந்தது. இதனால், இது கொலையாக இருக்கலாம் என்று போலீசார் முடிவுக்கு வந்தனர். பின்னர், உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து கவுரிபித்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து,  அந்த இளம் பெண் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த இளம் பெண், கவுரிபித்தனூர் தாலுகா துமகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்பதை கண்டுபிடித்தனர். பின்னர், சந்தியாவின் வீட்டிற்குச் சென்று போலீசார், அவரது தாயாரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சந்தியாவின் தாய் ராமாஞ்ஜுனம்மாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று தனிப்பட்ட முறையில் விசாரித்துள்ளனர். அப்போது, சந்தியாவை தனது இன்னொரு மகள் நேத்ராவதி, அவரது கணவர் பாலகிருஷ்ணா, தனது மகன் அசோக் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததை, அவர்  ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, ராமாஞ்ஜுனம்மாவை கைது செய்த போலீசார் நேத்ராவதி, பாலகிருஷ்ணா, அசோக் ஆகியோரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பெற்ற மகளை, தாய் உட்பட 4 பேர் சேர்ந்து கொலை செய்து ஏரியில் வீசிய சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாதி வெறி, பெற்ற மகளை கொலை செய்திருப்பது, அந்த பகுதியில் பேசும் பொருளமாக மாறி உள்ளது.