சசிகலா தலைமையில் ஜெயலலிதா நினைவிடம் வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, கடந்த 27 ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலையானார். 

சசிகலா விடுதலையானது போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், அவர் சிகிச்சை பெறும் விக்டோரியா மருத்துவமனைக்கே சென்று, சிறைத்துறையினர் கையொப்பம் பெற்று, அவரை விடுதலை செய்தனர். 

இதனால், சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். 

அதே நேரத்தில், வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி தான் சசிகலா, சென்னை வருவார் என்று கூறப்பட்ட நிலையில்,  நாளை மறுநாள் அவர் சென்னை வர இருக்கிறார்.

மேலும், சசிகலா விடுதலையான நாளில் இருந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளது. 

அதன் படி, தண்டனை அனுபவிக்கத் தொடங்கிய நாளில் இருந்து சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், தற்போது சசிகலா விடுதலையானாலும், அடுத்த வரும் 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி இருப்பது ஒரு புறம் இருந்தாலும், சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். 

சசிகலா வருகையை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து சுவரொட்டிகளைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில், சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டியவர்களை அதிமுக தலைமையானது, கட்சியில் இருந்து நீக்கி சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளருமான செந்தமிழன் சார்பில்,சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும், பேரணி நடத்தவும் அனுமதி கேட்டு சென்னை காவல் துறையில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. 

சசிகலா தலைமையில் நடத்தப்படும் இந்த  பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்றும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை, சசிகலா தலைமையில் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கேட்டு இந்த மனு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த மனுவைப் பரிசீலித்து சட்டப் பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போலீசார் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள.

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.