“உழவர் ஒழிப்புச் சட்டங்கள் மூன்றையும் முறியடிப்போம், நெஞ்சை நிமிர்த்துங்கள்” என்று, காவிரி உரிமை மீட்புக் குழு காட்டமாக கூறியுள்ளது.

இது தொடர்பாக காவிரி உரிமை மீட்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த மூன்று சட்டங்களும் உழவர் முன்னேற்றம், உழவுத்தொழில் முன்னேற்றம் பற்றி எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கூறவில்லை என்றும், உழவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு இலாபவிலையோ அல்லது குறைந்த அளவு ஆதரவு விலையோ கிடைத்திட எதுவும் கூறவில்லை என்றும், மாறாக முதலாளியப் பெருங்குழுமங்களிடம் (கார்ப்பரேட்டுகளிடம்) உழவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு அந்நிறுவனங்கள் கூறும் பயிர்களைச் சாகுபடி செய்து விளைச்சலை அந்த நிறுவனங்களிடமே விற்பதற்குரிய விதிமுறைகளைக் கூறுகின்றன” என்று, பகிரங்மாக குற்றம்சாட்டி உள்ளது. 

“விதைகள், இடுபொருட்கள், விலை உள்ளிட்ட வேளாண் பணிகளில் இருந்து அரசு முற்றிலும் விலகிக்கொண்டு பெருங்குழுமங்களிடம் உழவர்களை ஒப்படைக்கின்றன” என்றும், காவிரி உரிமை மீட்புக் குழு கவலைத் தெரிவித்துள்ளது.

முக்கியமாக “இந்த மூன்று சட்டங்களையோ அல்லது இவற்றில் ஒன்றையோ இயற்ற வேண்டும் என்று இந்தியாவில் எந்த உழவர் சங்கமும் கேட்கவில்லை. ஆனால், இந்த மூன்று சட்டங்களும் வேண்டும் என்று அதானி, அம்பானி போன்ற பெருங் குழுமங்களும், வெளிநாட்டு அரசுகளும், உலக வணிக நிறுவனமும் கோரி வருகின்றன” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

மேலும், “உழவர்கள் தங்கள் விளைப் பொருட்களைத் தொலைவான இடங்களுக்குக் கொண்டு போய் விற்க வசதியும் இல்லை; வாய்ப்பும் இல்லை. தங்கள் வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ள இடமுமில்லை; விளைந்ததை உடனே விற்றுக் கடன் அடைத்தல், அவசரச் செலவுகளைப் பார்த்தல் என்ற நெருக்கடியில்தான் உழவர்கள் இருக்கிறார்கள். ஒப்பந்தப் பண்ணையில் சேர்ந்துள்ள உழவர்கள் தங்கள் உற்பத்திப் பொருளை அந்தப் பண்ணையிடம் மட்டும்தான் விற்க முடியும். வெளியே விற்க முடியாது. இவ்வாறு சட்டம் இயற்றிய மோடியும் இதற்கு டமாரம் அடிக்கும் எடப்பாடியும் உழவர்கள் தங்கள் விளைபொருட்களை இந்தியா முழுவதும் விற்றுக் கொள்ளலாம் என்று, கூறுவது ஏமாற்று வேலை” என்றும், காவிரி உரிமை மீட்புக் குழு காட்டமாக கூறியுள்ளது.

“சமையல் எரிவளி சிலிண்டருக்கு மானியம் தொடரும் என்று கூறி, அத்தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் போடுவோம் என்று சொல்லி மோடி ஆட்சி போட்டது. இப்போது என்னாயிற்று? எரிவளி சிலிண்டருக்கு மானியம் இல்லை என்று அறிவித்து விட்டார்கள். அதேபோல் ஓரிரு ஆண்டுகள் நெல்கொள்முதலைத் தொடர்ந்து விட்டு, பின்னர் முற்றிலும் நிறுத்தி விடுவார்கள். கொள்முதல் இல்லை என்றால் குறைந்த பட்சஆதரவு விலையும் இல்லை. எல்லாம் சந்தை பார்த்துக்கொள்ளும் என்பார்கள்” என்றும்,  மேற்கொள்காட்டி உள்ளது.

குறிப்பாக, “மோடி அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஓரிரண்டு ஆண்டுக்கு வேண்டு மானால் நேரடி நெல்கொள் முதலைத் தமிழ்நாடு அரசு தொடரலாம்; அதன் பிறகு கொள்முதல் திட்டம் கொல்லப்பட்டு விடும். உழவர் தற்கொலைகள் உச்சம் தொடும்” என்றும், காவிரி உரிமை மீட்புக் குழு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

“இந்தமூன்று சட்டங்களும் உழவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்தமக்களுக்கும் ஆபத்தானவை! கொள்முதல் இல்லாதபோது ஞாயவிலைக்கடை இருக்காது. பெருங்குழுமங்கள் இன்றியமையாப் பண்டங்களான அரிசி உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்வித்துக்கள், உருளை கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை பதுக்கி வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக, இவற்றை இன்றியமையாப் பண்டங்கள் பட்டியலில் இருந்து மூன்றாவது சட்டம் நீக்கிவிட்டது” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

“ இலட்சக்கணக்கான டன்கள் உணவுப்பொருட்களை ஒரே இடத்தில் பதுக்கி வைத்துக் கொண்டு, செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்ளைவிலைக்கு அதானிகள் அம்பானிகள் அவர்களின் பங்காளிகள் விற்பார்கள். கிடுகிடுவெனவிலை உயர்வு ஏற்படும்.” என்றும், அதில் கூறப்பட்டு உள்ளது.

மிக முக்கியமாக “நான்காவது சட்டமாக மின்சாரச்சட்டம் பாய்வதற்கு நேரம் பார்த்துக்கொண்டுள்ளது. இந்த சட்டம் வந்தால், வேளாண்மைக்கானக் கட்டணமில்லா மின்சாரம், வீட்டுமின்சாரச் சலுகைகள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும். இந்தச்சட்டங்கள் அனைத்து மக்களுக்கும் எதிரானவை!” என்றும், காவிரி உரிமை மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

இதனால், “உழவர் ஒழிப்புச் சட்டங்கள் மூன்றையும் முறியடிப்போம்! நெஞ்சை நிமிர்த்துங்கள்! தஞ்சையில் பேரணி” என்ற முழக்கத்தோடு, வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சையில் உழவர் பெருந்தலைவர் சி.நாராயணசாமி சிலை முன்பு தொடங்கி, தமிழ்ப்பேரரசன் ராஜராஜன் சிலை வரை மாபெரும் பச்சைக்கொடி பேரணியை காவிரி உரிமை மீட்புக் குழு நடத்துகிறது” என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.