“அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கை கைவிடப்போவதில்லை” என்று, நீதிமன்றத்தில் சசிகலா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலைக்கு சென்றது முதல், சசிகலாவின் வாழ்க்கை மட்டுமல்ல, அதிமுகவின் வரலாறும் அப்படியே மாறியிருக்கிறது.

அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவும், டிடி.வி தினகரன் துணைப் பொதுச் செயலாளராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாகவே, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றார். ஆனால், அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பெயரில் பொதுக்குழுக் கூட்டம் மீண்டும் நடத்தப்பட்டது. 

அந்த கூட்டத்தில், சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். 

முக்கியமாக, “அதிமுக நிர்வாகிகள் சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது” எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சசிகலா மற்றும் டிடிவி தினகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவில், “அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் செல்லாது” என அறிவிக்கக் கோரி இருவரும் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “கட்சியின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அதிமுக தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும், அவர் அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.

இதனால், வங்கிகளின் மேலாளர்கள் வங்கிக் கணக்குகளை சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பினருக்கு வழங்கினார்கள். இந்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். 

அத்துடன், நீதிமன்றக் கட்டணம் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் வருவதால், இந்த வழக்கு சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தான், சசிகலாவும் தண்டனை காலம் முடிந்து சென்னை திரும்பினார். 

பிறகு, சசிகலாவின் ஆலோசனையின் படி, அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், சென்னை சிவில் நான்காவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தனர்.

அப்போது, டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கை அவர்  அண்மையில் வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில், இந்த வழக்கு வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், “அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கைக் கைவிடப்போவதில்லை” என்று, சசிகலா உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், இந்த வழக்கை தொடர்ந்து நடத்தப்போவதாகவும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தற்போது கூறியுள்ளது.

மேலும், “இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்படும்” என்று, சசிகலா தரப்பு வழக்கறிஞர் சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். இதனால், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையிலான அதிமுக தலைமைக்கு தற்போது புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.