கணவனோடு சண்டைபோட்ட மனைவி, தனது கணவன் பணியாற்றும் விமானப்படை தளத்துக்கு முன்பாக கை குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் பணியாற்றி வருபவர் பவன் குமார். இவர், ராஜஸ்தானைச் சேர்ந்த சாக்‌ஷி என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கோவை மாவட்டத்தில் பணி வழங்கப்பட்டதால், அவர் கோவை சூலூர் விமானப்படை குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார். 

இந்த தம்பதிகளின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே சென்றுகொண்டிருந்த நிலையில், இந்த மகிழ்ச்சியின் பரிசாக இந்த தம்பதிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், குழந்தையுடன் இந்த தம்பதி சூலூர் விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில், இந்த தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு அதிகரிக்கவே, ஒரு கட்டத்திற்குப் பிறகு பொறுமை இழந்த மனைவி, இது தொடர்பாக விமானப்படை காவல் நிலையத்தில் கணவன் மீது அவர் மனைவி சாக்‌ஷி புகார் அளித்தார். 

இந்த புகாரின் படி, காவல் நிலையம் அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், கணவன் - மனைவி இருவரையும் சமாதானம் பேசினர். ஆனால், அதில் அவர்கள் சமாதானம் ஆகாத நிலையில், அவர்கள் இருவரையும் சொந்த ஊருக்குச் சென்று இரு வீட்டாருடன் பேசி சமாதானம் செய்து வரவேண்டும் என்று அனுப்பி வைத்தனர். 

அதன் படி, கணவன் - மனைவி இருவரும் ராஜஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால், ராஜஸ்தானுக்கு போவதற்கு முன்பாகவே வழியிலேயே இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்படவே, பவன் குமார் பாதி வழியிலேயே தன் மனைவியை இறக்கி விட்டுச் சென்று உள்ளார். அத்துடன், கணவன் பவன் குமார், தனது செல்ஃபோனையும் சுவிட்ச் ஆப் செய்து உள்ளார்.

இதனால், இன்னும் கோபம் அடைந்த மனைவி சாக்‌ஷி, என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றுள்ளார். இதனையடுத்து, அந்த பெண் சாக்‌ஷி மீண்டும் விமானப்படை குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு வர முயன்றுள்ளார். ஆனால், அங்கு இருந்த விமானப்படை காவலர்கள் அவரை உள்ளே விட அனுமதிக்கவில்லை என்று, கூறப்படுகிறது.

இன்னும் இன்னும் கோபம் அடைந்த அந்த பெண், தனது கை குழந்தையுடன், விமானப்படை தளத்துக்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, அங்கு விரைந்து வந்த விமானப்படை காவல் நிலைய போலீசார், அந்த பெண் சமாதானம் பேச முயன்று வருகின்றனர். அத்துடன், மனைவியை இறக்கிவிட்டுவிட்டு ராஜஸ்தான் சென்ற அவரது கணவன் பவன் குமாரையும் தொடர்ந்துகொள்ள போலீசார் முயன்று வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.