திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருவதற்குப் பின்னணி காரணம் பற்றிய தகவல்கள் தமிழக அரசியல் 
களத்தில் கிசுகிசுக்கப்படத் தொடங்கி உள்ளது, அதிமுக தொண்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், நீட்தேர்வு, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும், ஆளும் கட்சியை எதிர்த்து எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது வழக்கமான ஒரு நிகழ்வு தான். ஆனால், “மிக 
சிறப்பாக திமுக ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறது” என்று சில அதிமுக மாஜிக்கள் மற்றும் பாஜக மாஜிக்களே வாய் திறந்து பாராட்டிய நிலையிலும் கூட, அதிமுக இன்றைய தினம் திமுகவிற்கு எதிராகப் போராட்டம் நடந்து ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. 

அதாவது, எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வந்து குறைந்தது 6 மாதங்களாவது ஆன பிறகு தான், எதிர்க் கட்சிகள் குறை கூறுவது வழக்கமாக நிகழும். அந்த வகையில் பார்த்தாலும், திமுக ஆட்சிக்கு வந்து 2 மாதங்கள் ஆகும் நிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே அதிமுக போராட்டம் நடத்துவது பல்வேறு சந்தேகங்களையும், 
கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

அத்துடன், “ஆட்சிக்கு வந்த 2 மாத காலத்திற்குள்ளேயே எல்லா அறிவிப்பையும் நிறைவேற்றிவிட வேண்டும்” என்று, அதிமுக நினைப்பது அதை விட ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறுபடும் நிலையில், தமிழக அரசின் கஜானாவைச் சுத்தமாக காலி செய்து வைத்து விட்டு போன பிறகு, இந்த கொரோனா நெருக்கடியில் எல்லா அறிவிப்பையும் திமுக நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக நினைப்பது அதை விட இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும், பலரும் வெளிப்படையாக விமர்சனம் செய்யத் தொடங்கி உள்ளனர். 

இதனால், “திமுக விற்கு எதிராக அதிமுகவுக்கு போராட்டம் நடத்த உண்மையான காரணம் என்ன? அதிமுக ஏன் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாகக் குறுகிய காலத்திற்குள்ளேயே அறிவித்தது? என்ற பல கேள்விகள் பரவலாக எழுந்துள்ளது. 

இதனால், இது தொடர்பாக பல காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன் படி, திமுக ஆட்சிக்கு வந்தது முதல், அதிமுகவின் செல்வாக்கு மளமளவென சரிந்து கொண்டிருக்கிறது என்றும், அதிமுகவின் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் அதிமுக தற்போது இருக்கிறது என்று முதல் காரணம் முன் வைக்கப்படுகிறது.

அதிமுகவின் இந்த நெருக்கடியிலும், நிர்ப்பந்தத்திற்கும் முதல் காரணமே சசிகலாவின் வருகையும், அவர் தொண்டர்களிடம் தொடர்ச்சியாகப் பேசி வெளியிடும் ஆடியோக்கமே அதிமுகவின் சரிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக 2 வது காரணம் என்னவென்றால், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பற்றி திமுக எடுத்து வைத்திருக்கும் ஊழல் பட்டியலின் லிஸ்ட்களும், அதன் மீதான நடவடிக்கைகளும், அது தொடர்பாக பயந்து வலுவிழந்து வரும் அதிமுகவின் செல்வாக்குகளும் மிகுந்த கவலையை, அந்த கட்சியின் தலைமையைக் கவலையடையச் செய்திருக்கிறது.

அதிமுக ஆட்சியை விட்டு சென்ற அடுத்த 2 மாதத்திற்குள், அதிமுகவின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கு முகமாக இருப்பதையும், அதிமுகவின் தலைமையை இன்னும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது. 

குறிப்பாக, எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது, அதிமுகவின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையே அசைத்துப் பார்த்திருக்கிறது. 

“எம்ஆர் விஜயபாஸ்கர் வரை "கை வைத்தவர்கள், அதைத்தடுத்தவர்களையும் விட மாட்டார்கள்” இதனைக் கண்டித்து இப்போதே ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்” என்று, முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அப்போது கடுமையாகக் கொந்தளித்து இருக்கிறார். 

“அப்படி ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டுமே ஊழல் பட்டியலில் அதிமுகவினர் அடுத்து யாரும் சிக்க மாட்டார்கள்” என்றும், சிலர் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

இவற்றுடன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுகவுடன் நட்பு பாராட்டி வருகிறார். தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணையும் முயற்சியில் இறங்கி வருகிறது. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, பாமக கட்சிகள் பிரிந்துச் சனெ்ற திமுகவின் பக்கம் நிற்கும் என்றும், இதனால், கூட்டணி பலத்தையும் அதிமுக இழந்து கொண்டிருக்கிறது என்ற கவலையும், அதிமுக தலைமையை இன்னும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. 

மிக முக்கியமாக, தமிழக அரசியல் வரலாற்றில் காலம் காலமாக, “அதிமுக - திமுக” என்ற நிலை தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தற்போது அதிமுகவில் கூட்டணியில் உள்ள பாஜக தலைவர்கள், “தமிழ்நாட்டில் இனி மேல் திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்றும், இனி திமுக - பாஜக என்ற நிலை தான் உருவாகப் போகிறது” என்றும், அக்கட்சித் தலைவர்கள் அடிக்கடி பேசி வருவதும், அதிமுகவை கவலை கொள்ள செய்திருக்கிறது. இது, தொடர்பாக பாஜகவை, அதிமுக தலைமை கண்டிக்கக் கூட முடியாமல் திணறி வருகிறது.

இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளதாலும், தங்கள் கட்சியின் சக்தியை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளதாலும், சோர்ந்து போய் இருக்கும் அதிமுக தொண்டர்களைத் தட்டி எழுப்பும் வகையிலும், இப்படியான காரணங்கள் மட்டுமே இந்த போராட்டத்தை அதிமுக அவசர அவசரமாக அறிவித்து, அதனை இன்றும் நடத்தியும் காட்டியிருக்கிறது. அதிமுக இன்று போராட்டம் நடத்தியது தொடர்பாக தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் இது தொடர்பான அனல் பறக்கும் விவாதம் நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.