“அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் வரும்” என்று, திடீரென உரிமை கொண்டாடும் டிடிவி தினகரனால், அதிமுகவில் ஏதோ ஒன்று நடக்க போகிறது என்ற யூகம்
எழுந்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்
அமித்ஷா ஆகியோரை திடீரென்று சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியது முதல் அதிமுக தொடர்பாக பல்வேறு தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக்கொண்டு
இருக்கின்றன.

அதாவது, சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட
நிலையில், “அரசியலில் இருந்து ஒதுங்குவதாக” அறிவித்தார். 

முன்னதாக “அமமுகவுடனும் கூட்டணி வைக்க வேண்டும், அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும்” என்று, அமித்ஷா கடைசி பஞ்சாயித்து சென்று எடுப்படாமல் போனது. 

அப்போது, “சசிகலா மீண்டும் கட்சிக்குள் வந்தால், தங்களுடைய அரசியல் செல்வாக்கு குறைந்து விடும் என்று அதிமுக தலைமை இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து  கடுமையாக எதிர்த்து நின்றது. 

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கட்சியானது பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தது.

பின்னர், “தேர்தலில் தோல்வியடைந்ததும் அதிமுக - பாஜக தலைவர்கள் பரஸ்பர குற்றச்சாட்டை ஒருவர் மீது ஒருவர் சுமத்திக்கொண்டனர். 

இந்த சூழலில் தான், சசிகலாவின் ரீ என்டரியாக, அதிமுக மற்றும் அமமுக  தொண்டர்களுடன் சசிகலா பேசிம் ஆடியோ ஒவ்வொன்றாக வெளியாகி,  அதிமுக வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சசிகலாவின் இந்த அரசியல் ரீ என்டரி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன், தேர்தலுக்கு முன்பும் அதன் பின்பும் அதிமுகவில் அதிகாரம் மற்றும் பதவி போட்டி, கட்சி பதவி நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஓபிஎஸ்,
- இபிஎஸ் இடையே கடும் முட்டல் மோதல் ஏற்பட்டது. 

முக்கியமாக, “அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு யார் வருவது?” என்பது உள்ளிட்ட பல விசயங்களை அவர்களுக்குள் பெரும் பிரச்சனைாயக உருவெடுத்து பிறகு அமையடைந்தது.

மேலும், அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்றதால், ஓபிஎஸ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்தியடைந்தார் என்றும், இதனால் இரண்டாம் நிலை பொறுப்பே அவருக்கு கிடைக்கப் பெற்றது. 

பின்னர், கட்சிக்குள் சற்று தான் ஓரம் கட்டப்படுவதால், தனது செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ், டெல்லியில் ஆதரவாக உள்ள பாஜக மேலிட தலைவர்களை அணுகி பேச்சு வார்த்தை நடத்தினர். 

இதனையடுத்து, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கொடுத்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றார். இதனை அறிந்த எடப்பாடி  பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் வேலுமணியும், நிர்மலா சீதாராமன் மூலமாக ஓபிஎஸ் உடன் இணைந்து மோடியை சந்திக்க நேரம் வாங்கி தரும்படி  கேட்டுக்கொண்டார். அதன் பிறகே இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினாலும், அதன் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக மோடியை
சந்தித்து தங்கள் கட்சிக்குள் நடக்கும் மோதல்கள் குறித்து தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை விளக்கி கூறியுள்ளனர்.

மோடி சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்து எழுப்பிய கேள்விகளை முற்றிலுமாக தவிர்த்தே பதில் அளித்தார்.
அப்போது, ஓபிஎஸ் எதுவும் சொல்லாமல் இருந்தார். 

அதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார்கள். அப்போது, “தேர்தல் தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்றும்,
தேர்தலில் சசிகலாவை சேர்த்து இருந்தால், இப்படி நாம் தோற்றுப் போக வாய்ப்பு இல்லை” என்றும், அமித்ஷா கூறி வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்திகள் வெளியாகி ஒரு பக்கம் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், சமீபத்தில் அதிமுகவை பற்றி எந்த கருத்தும்
கூறாமல் இருந்து வந்த டிடிவி.தினகரன் தற்போது அதிமுக பற்றி தொடர்ந்து பேச ஆரம்பித்து இருக்கிறார். 

அதன் படி, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த  டிடிவி.தினகரன், “தேர்தலில் வெற்றி, தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் பயணம்  செய்கிறோம் என்றும், அதிமுக - அமமுக இணையுமா என்கிற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது” என்றும், சூசகமாக பதில் அளித்தார். 

“இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோர் பிரதமரை சந்தித்திருப்பது குறித்து, அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும், அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு” என்றும், அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “அதிமுக தொடங்கியது முதல் எம்ஜிஆர், ஜெயலலிதா என்கிற ஒற்றை தலைமையும், சிறைக்கு செல்லும் முன்பு வரை சசிகலா என்கிற ஒற்றை  தலைமையில் தான் அதிமுக இருந்தது என்றும், தற்போது அந்த நிலை மாறியுள்ளது என்றும், விரைவில் அது சரியாகி மீண்டும் ஒற்றை தலைமையில் அதிமுக வரும்” என்றும், அவர் குறிப்பி்ட்டு பேசினார்.

முக்கியமாக, “முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் நடவடிக்கை என்பது உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்றும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தால் சரிதான்” என்றும், அவர் சுட்டிக்காட்டி பேசினார். 

டிடிவி தினகரன் திடீரென அதிமுகவை உரிமை கொண்டாடுவது, கட்சியை விரைவில் சரி செய்து விடலாம் என சசிகலா பேசி வருவது, மோடி, அமித்ஷா உடனான
சந்திப்புக்கு பின் ஓபிஎஸ் - இபிஎஸ், சசிகலா குறித்து பேச  மறுப்பது” என  அனைத்தையும் பார்க்கும் போது, அதிமுகவில் கூடிய விரைவில் பெரிதாக ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை மட்டும் காட்டும் வகையில் உள்ளதாக அதிமுகவினரே கிசுகிசுக்க தொடங்கி உள்ளனர்.

மிக முக்கியமாக, “பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் சிக்கி உள்ளதால், அவர்கள்
தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லியிடம் சரணடைந்து உள்ளதாக அதிமுகவினரே விமர்சனம் செய்து வருகின்றனர். 

இதனால், டெல்லி எடுக்கும் முடிவுக்கு இவர்கள் இருவர் உட்பட கட்சியில் உள்ள மற்ற அனைவரும் நிச்சயம் அடிபணிந்து செல்வார்கள் என்றும் கூறப்படும் நிலையில், அதிமுகவில் மீண்டும் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்றும், அதிமுகவில் கூடிய விரைவில் தலைமை மாற்றம் ஏற்படலாம் என்றும், அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால், அதிமுகவில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.