“அண்ணே.. அண்ணே. ஸ்டாலின் அண்ணே.. நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே..” என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி
ஆர்ப்பாட்டம் நடத்தியது வைரலாகி வருகிறது.

அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. அதாவது, “திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, நீட்தேர்வு, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை” என்று, குற்றம்சாட்டி அதிமுக இந்த போராட்டத்தை நடத்தியது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அதிமுகவினர் பலரும் கலந்துகொண்டனர். 

அதன் படி, சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக விரைந்து நிறைவேற்ற வேண்டும்” என்று, கேட்டுக்கொண்டார்.

அத்துடன், “கடந்த 10 ஆண்டுகள் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தது அதிமுக அரசு தான்” என்றும், குறிப்பிட்டு பேசினார். 

மேலும், “முந்தைய அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டது என்றும், ஆனால் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது” என்றும், அவர் குற்றம்சாட்டனார்.

“திமுகவின் பெட்ரோல், டீசல் விலை  குறைப்பு வாக்குறுதி என்னாச்சு? என்றும், அவர் கேள்வி எழுப்பினார். 

குறிப்பாக, “திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அதிமுக ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

அதே போல், தேனி மாவட்டம் போடியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த  ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக வை யாராலும் கைப்பற்ற முடியாது” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “அதிமுக கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழி நடத்த முடியாது என்றும், நான்கரை ஆண்டுகளாக நானும், பழனிசாமியும் ஒன்றாக இணைந்து தனிப்பட்ட குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் அதிமுக வை வழிநடத்தி வருகிறோம்” என்றும், தெரிவித்தார். 

“எந்த நோக்கத்திற்காக அதிமுக கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த நிலை தொடரும்” என்றும் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். 

அதே போல், சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதாவது, திமுகவிற்கு எதிராக முழக்கமிட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திடீரென்று, “அண்ணே.. அண்ணே. ஸ்டாலின் அண்ணே.. நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே..” என்று, பாட்டுப்பாடிய ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

தொடர்ந்து பாட்டுப்பாடிய அவர், “அத சொன்னா வெட்கக்கேடு.. நான் சொல்லாட்டி மானக்கேடு...” என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப் பாடி அசத்தினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி ஆர்பாட்டம் நடத்தியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.