நாமக்கல் அருகே 19 வயது இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளரான சிவகுமார், அதே பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். 

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க விசைத்தறி தொழிலாளி பெண் ஒருவர், சிவக்குமாரிடம் 20 ஆயிரம் ரூபாய் வட்டிக்குப் பணம் பெற்றுள்ளார். கடந்த 2009 ஆம் அண்டு கடன் பெற்ற பணத்திற்கு, அந்த பெண் மாதம் தோறும் வட்டி பணத்தைச் செலுத்தி வந்து உள்ளார்.

அதன்படி, கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி வட்டி பணத்தைக் கொடுப்பதற்காக, அந்த 50 வயது பெண், தனக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில், தன்னுடைய 19 வயது மகளிடம் வட்டிப் பணத்தைக் கொடுத்து அனுப்பி உள்ளார்.

அதன்படி, பட்டி பணம் தரும் நிதி நிறுவனத்திற்கு அந்த இளம் பெண் சென்றுள்ளார். அங்கு, சிவகுமாரும் அவரது நண்பர் ஆமையன் என்கிற ரவியும் இருந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.

அதைக் குடித்த அந்த பெண், சிறிது நேரத்தில் மயங்கி உள்ளார். இதனையடுத்து, சிவக்குமார் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து அந்த 19 வயது இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன், அந்த பெண் நிர்வாணப்படுத்தியதை வீடியோவாக எடுத்து உள்ளனர். அந்த காட்சிகளையும், சிவகுமார் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மயக்கம் தெளிந்து பார்த்த பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, பள்ளி பாளையம் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு நாமக்கல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

அத்துடன், இந்த வழக்கில் சிவகுமார் மீது நடவடிக்கை எடுப்பதற்குக் காரணமாக இருந்த விசைத்தறி சங்க நிர்வாகி வேலுசாமி, அப்போதே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சிவகுமாருடன் இணைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ரவி என்பவர் அப்ரூவராக மாற அவரும் கொலை செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் அது தொடர்பாக அடுத்தடுத்த 2 கொலைகளும் நடந்ததால், அது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வந்தது. கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நாமக்கல் மகிளா நீதிமன்றம் தற்போது பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. 

அதன் படி, சிவகுமாரை குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது. அத்துடன், குற்றவாளி சிவகுமாருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 34 ஆண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கிய தோடு, அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.