சிறந்த இசையமைப்பாளராகவும், சீரான நடிகராகவும் தன்னை செதுக்கிக் கொண்டவர் விஜய் ஆண்டனி.  தற்போது FEFSI சிவா அவர்களின் தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தை நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா அவர்களின் தயாரிப்பில் அக்னி சிறகுகள் என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் காக்கி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன. விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறார். 

தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து, ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு தனது படங்களின் தயாரிப்பாளர்களுக்கு கூறியது பலரது பாராட்டை பெற்றது. லாக்டவுனில் சம்பளத்தை குறைத்த முதல் நடிகர் விஜய் ஆண்டனி என்ற பெருமையையும் பெற்றார். 

விஜய் ஆன்டனியின் படங்களுக்கு, தமிழ்ப் பட வியாபார எல்லைகளைத் தாண்டியும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. 2016-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படம்,  ஆந்திராவில் பல புதிய சாதனைகளை செய்ததால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாலும் பெரிதும் விரும்பப்படுபவராகிவிட்டார் விஜய் ஆன்டனி. 

விஜய் ஆன்டனியின் ஒவ்வொரு படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் நிலையில், அவரது பிறந்த நாளானா ஜூலை 24-ம் தேதி, புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. விஜய் ஆன்டனி பிக்சர்ஸ் பி லிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம் உலகெங்கும் 2021-ம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. 

2021ஆம் ஆண்டு திரையுலகுக்கு அற்புதமான ஆண்டாக அமையப் போகிறது. நேர் மறையான கருத்துக்களையே என் படங்களில் எப்போதும் நான் வலியுறுத்துவது வழக்கம். இந்தப் படமும் அப்படியே அமைந்திருக்கும். படத்தை இயக்குவது குறித்து மிகச் சிறந்த தொழில் நுட்பக் கலைஞருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். இது குறித்த அறிவிப்பு கண்டிப்பாக ஆச்சரியம் மிக்கதாக இருக்கும்.  மேலும் விவரங்களுக்கு சற்றே காத்திருங்கள் என்று தனக்கே உரித்தான நம்பிக்கையூட்டும் புன்முறுவலுடன் தெரிவித்தார் விஜய் ஆன்டனி. 

இதைத்தொடர்ந்து விஜய் ஆன்டனி புரொடக்ஷன்ஸ் பத்தாவது தயாரிப்பாக உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வரும் ஜூலை 24-ம் தேதி வெளியிடப்படும். ஒருவேளை பிச்சைக்காரன் இரண்டாம் பாகமா இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ஆண்டனி ரசிகர்கள். 24-ம் தேதி வரை காத்திருப்போம்.