சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று கடந்த வாரம் வரை சென்னையில் மையம் கொண்டு பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது சென்னையில் சற்று தணியத் தொடங்கி உள்ளது. அதற்குப் பதிலாகத் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவித் தொடங்கி உள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர், அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேரும், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் என அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி தற்போது வரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களைச் சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் மட்டும் மொத்தம் 14,923 பேர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

சென்னையில் அதிகபட்சமாக  கோடம்பாக்கம் மண்டலத்தில் 2099 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, அண்ணா நகரில் 1609 பேரும், தேனாம்பேட்டையில் 1441 பேரும், ராயபுரத்தில் 1146 பேரும்,  திருவிக நகரில் 1042 பேரும், அடையாறு மண்டலத்தில் 1002 பேரும், தண்டையார்பேட்டையில் 816 பேரும், வளசரவாக்கத்தில் 720 பேரும், அம்பத்தூரில் 893 பேரும், திருவொற்றியூரில் 527 பேரும், ஆலந்தூரில் 449 பேரும்,  பெருங்குடியில் 354 பேரும், சோழிங்கநல்லூரில் 344 பேரும், மாதவரம் பகுதியில் 386 பேரும், மணலியில் 205 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
அதே போல், சென்னை பூந்தமல்லியில் இன்று ஒரே நாளில் மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகரின் உடல்நிலை மோசமடைந்தால், அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயிலில், தலைமை அர்ச்சகர் நரசிம்மாச்சாரியார் உள்பட 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை கொளத்தூர் தொகுதியில் கொரோனா பாதிப்பு இருக்கும் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து செய்தார். அப்போது, அந்த தொகுதி பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

கொரோனா தொற்று பாதிப்பால், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தான் தற்போது பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பினார்.

அத்துடன், சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி, மதுரையில் மட்டும் தற்போது கொரோனா பாதிப்பானது 8 ஆயிரத்தைக் கடந்த அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,103 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.