நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகாமி வருகிறது. கடந்த சில மாதங்களாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் எந்த புதிய திரைப்படங்களையும் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல கோடி ருபாய் முதலீட்டில் தயாராகி ரிலீஸுக்கு ரெடியாக உள்ள படங்களை கூட வெளியிடமுடியாத சூழ்நிலை தான் உள்ளது. அதனால் தயாரிப்பாளர்கள் அதிக நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

தொற்று எண்ணிக்கை முழுமையாக குறைந்து மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் தியேட்டர்கள் திறக்கப்பட சாத்தியம் உள்ளது. தற்போதைக்கு தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றிற்கு எந்த தளர்வும் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து நஷ்டத்தை தவிர்க்க பல திரைப்படங்கள் தற்போது நேரடியாக ஓடிடி இணையத்தளத்தில் வெளியாக தயாராகி வருகின்றன. 

லாக்டவுனில் ஓடிடி தளத்தில், 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் முதலில் வெளியானது. அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வைபவ் நடிக்கும் காட்டேரி திரைப்படம் நேரடியாக ஓடிடி இணையத்தளத்தில் வெளிவர உள்ளதாக தெரிகிறது. 

திகில் திரைப்படமான காட்டேரி படத்தை டீகே இயக்கியுள்ளார். யாமிருக்க பயமே படம் மிகப்பெரிய ஹிட் என்பதால் காட்டேரி படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டு விட்டது. காட்டேரி திரைப்படத்தை ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இவர் இதற்கு முன் ஹாரர் காமெடி படமான யாமிருக்க பயமே படத்தை இயக்கினார். 

காட்டேரி படத்தை வாங்குவதற்கு அமேசான் மற்றும் Zee5 நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த திரை வட்டாரம் மூலம் கலாட்டா செவிகளுக்கு செய்திகள் எட்டியது. நினைத்த ரேட்டிற்கு படம் விற்பனையாகவில்லை என்றால், இயல்பு நிலை திரும்பியவுடன், திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியாகக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 

இதில் வைபவ், வரலக்ஷ்மி சரத்குமார், சோனம் பாஜ்வா, கருணாகரன், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கொடூரமான பெயர் உள்ள பேயைத்தான் கிராமப்பகுதிகளில் காட்டேரி என சொல்வதுண்டு அந்த அடிப்படையில் இப்படமும் பயங்கர த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. படத்தின் முதல் சிங்கிளான என் பேரு என்ன கேளு பாடல் வெளியானது. அரண்மனை, காஞ்சனா போன்ற படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.