இந்தியாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமான நபர்களை கொரோனா தொற்று தாக்கியிருக்கும் சூழலில், இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கான பட்டியலில், முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா மாநிலம்தான். அங்கு இதுவரை 2,84,281 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 11,194 பேர் உயிரிழந்தனர். 

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டு விட்டார்கள். இருந்தபோதிலும், இன்னமும் தமிழகத்தில் சமூகப் பரவல் ஏற்படவில்லை எனத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றனர் தமிழக அரசின் சுகாதாரத்துறை அலுவலர்கள். இதுவரை தமிழகத்தில் 2,236 பேர் இறந்துள்ளனர். 

இறப்பு எண்ணிக்கையில் இந்திய அளவில், பாதிக்கப்பட்டோர் மற்றும் அதில் இறந்தோரை ஒப்பீடு செய்து பார்த்தால், இந்தியாவிலேயே இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் மாநிலமாகத் தமிழகம் இருக்கின்றதென்பதை முன்னிறுத்தி, `தமிழகத்தில் சமூகப்பரவல் இல்லை, இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம்' என்பது, சில மருத்துவர்களின் வாதமாக இருக்கிறது. 

இருப்பினும்கூட, தமிழகத்தில் இதுவரை சமூகப்பரவல் ஏற்படவில்லை என்பது பொய் என்கிறார்கள் இன்னும் சிலர். விவாதத்துக்குட்பட்டே இருக்கும் இந்த சமூகப் பரவல் நிலைப்பாடு, இந்திய அளவிலும்கூட இருக்கின்றது. உதாரணத்துக்கு, இந்தியாவில்,  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 34,956 கோவிட் -19  தொற்று ஏற்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில், 687 பேர் இறந்து விட்டனர். இதனால் இறப்பு எண்ணிக்கை, 25,602 பேர் என்றாகியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,03,832 என்றுள்ளது. இருப்பினும்கூட, இந்தியா இன்னும் சமூகப்பரவல் நிலை ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி வருகிறது. பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டு வரும் இந்த சமூகப் பரவல் விவகாரத்தில், கேரள அரசு மிகவும் நேர்த்தியாகச் செயல்படுவதாக சிலர் கூறிவந்தனர்.

கேரள அரசின் செயல்பாடுகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், அங்குதான் நோயாளிகள் எண்ணிக்கை உயர்வு நிலையை அடையாமல் ஒரே அளவுகோலில் இருக்கின்றது என்பதுதான். ஆனால், கொரோனா விஷயத்தில் எல்லா அரசும் குழம்பித்தான் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக, திருவனந்தபுரத்தில் கடந்த சில தினங்களாகவே அளவுக்கதிகமான நோயாளிகள் உறுதிசெய்யப்படுவது வாடிக்கையாகி உள்ளது. இந்த அதிகப்படியான எண்ணிக்கை, கேரளாவின் செயல்பாடுகளில் கேள்வியை எழுப்பத் தொடங்கிவிட்டது.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, நேற்று `திருவனந்தபுரத்தில் சமூக அளவில் தொற்று பரவல் தொடங்கி விட்டது' என்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ``பூந்துரா, புல்லுவிலா போன்ற பகுதிகளில் வரும் நாள்களில் சமூக அளவில் பரவல் நிச்சயம் ஏற்படலாம்" என்றும் கூறியிருக்கிறார்.

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தின் சில பகுதிகளில் கொரோனா வைரஸின் சமூக பரவல் தொடங்கியுள்ளது என்ற செய்தி, பலருக்கு அச்சத்தைத் தந்தாலும்கூட, இதற்கு மக்களின் அறியாமையே காரணம் என்ற விமர்சனமும் இருக்கிறது. ஏனெனில், பூந்துரா பகுதி மக்கள் சில தினங்களுக்கு முன் அவர்களைக் கண்காணிக்க வந்த மருத்துவ வல்லுநர்களிடம் இருமல் போராட்டம் நடத்தி நூதன முறையில் அவர்களை வெளியேற்றியிருந்தார்கள். சமூக இடைவெளி இல்லாமல், மாஸ்க் அணியாமல், வேண்டுமென்றே இருமல் செய்து அவர்கள் மேற்கொண்ட அந்த செயல்தான், இன்று அப்பகுதியில் கொரோனாவை தீவிரப்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

இதன் காரணமாகத்தான், இதுவரை 500 என்ற எண்ணிக்கையை ஒட்டி உருவாகிக் கொண்டிருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நேற்று 791 என்று உயர்ந்துள்ளது. இதில் 300 க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகள் திருவனந்தபுரத்தில் மட்டும் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்டத்திலும், கொல்லம் மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளிலும் தொற்று அதிக அளவில் உள்ளது. இருப்பினும்கூட இறப்பு எண்ணிக்கை கேரளாவில் முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதால், பயப்பட வேண்டாம் என அரசு சார்பில் கூறப்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் கேரளாவில் கொரோனா தொற்றினால் ஒருவர் மட்டுமே இறந்திருக்கிறார் என்பதே இதற்கான உதாரணம்.

கேரளாவில் இதுவரை, 2,68,128 பேருக்கு கொரோனாவுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதால், நிலை மீண்டும் சீராகும் என நம்பிக்கை சொல்கிறார்கள் கேரள அரசு அதிகாரிகள்.

 

- ஜெ.நிவேதா