ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் 'வலிமை'யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும்.

மே 1-ம் தேதி அஜித்தின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் வலிமை திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளதாக போனி கபூர் கூறியிருந்தார். 

இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதால் வரும் மே 1 அன்று வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாது என்று போனி கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித் குமாரின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

அந்த அறிவிப்பு வெளிவரும்போது, கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து உற்றார், உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

இத்தயை அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ், இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின்படி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும் பாதுகாப்புக்காவும் பிராத்திப்போம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக வலிமை அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்கள் போனி கபூரின் இந்த அறிவிப்பால் சோகமடைந்துள்ளனர்.