இந்தியாவின் முன்னணி பாடகர்களில் மிகப்பெரும் ஜாம்பவானாக , கிட்டத்தட்ட 50 ஆண்டுகளளாக இருந்து வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.தனது காந்தக்குரலால் பல இதயங்களை மயக்கும் மகிமை கொண்டவர்.15 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். மேலும் 40 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா போன்றவர்கள் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத்,இமான் என்று தற்போதைய ஜெனரேஷன் இசையமைப்பாளர்கள் வரை அனைவருடனும் பணியாற்றியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார் எஸ்.பி.பி,சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால் நேற்று திடிரென்று இவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று மதியம் எஸ்.பி.பி காலமானார் என்ற செய்தி கேள்விப்பட்டு பல ரசிகர்கள்,பிரபலங்கள் என்று இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.எஸ்.பி.பி குறித்த தங்கள் நினைவுகளையும்,இரங்கல்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.தற்போது எஸ்.பி.பி மறைவு குறித்து STR ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது , எத்தனை ஆயிரம் பாடல்கள்?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்?? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன். சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ் பி பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க... காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள... 
உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர். 

என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார். குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள். என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது. 

அதைப்போல... "காதல்  அழிவதில்லை" படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் "இவன்தான் நாயகன்" என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார். முதன் முதலில் "இவன் தான் நாயகன்" என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சார்.யாரையும் காயப்படுத்தாத அந்த குணம். தவறிப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்பு கோரும் தன்மை, ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கடந்தவர்... விடைகொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடு நிலாவே... லவ் யூ என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்