கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அப்போது, அம்மா நகரும் நியாயவிலை கடை திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இதனை அடுத்து தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் உருவாக்கப்பட்டன. இந்த  நகரும் நியாயவிலை கடை வாகனங்களை முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு (செப் 21) தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயா்த்தி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜன்சிங் சவாண் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இதனால், நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 15 ரூபாயிலிருந்து ரூ.16.50ஆக உயா்த்தப்படுகிறது. அதாவது 1.50 ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயா்வு அக்டோபா் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவித்திருந்தார்.

கொரோனா காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் சூழலில், இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், “பெரும்பான்மை ஏழை, எளிய மக்கள் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை, நியாய விலைக் கடைகளில் வரும் அக்டோபர் 1 முதல், ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தி, 15 ரூபாய் என்பதை, 16.50 ரூபாய்க்கு விற்கப் போகிறார்களாம். மண்ணெண்ணெயின் இந்த விலை உயர்வு கண்டனத்திற்குரியது” என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றின் விளைவாக, வாங்கும் சக்தியைப் பெருமளவுக்கு இழந்திருக்கும் எளிய மக்களின் முதுகில், அதிமுக அரசு, விலை உயர்வின் மூலம், மேலும் சுமையை ஏற்றுவது, சிறிதும் இரக்கமில்லாத நியாயமில்லாத செயல் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், இந்த விலை உயர்வை அரசே ஏற்றுக்கொண்டு, பழைய விலையிலேயே நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெயை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.