நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலகை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பாடகர் திருமூர்த்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாடகர் திருமூர்த்தி. பிறவியிலேயே பார்வை இல்லை என்றாலும் இசைத்திறன் கொண்டு உலகளவில் பிரபலமாகியுள்ளார் திருமூர்த்தி. திருமூர்த்திக்குக் கண் பார்வை இல்லாததால் அவரைப் பெற்றோர்கள் பர்கூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்த்து பின்னர் மகனை தனியாக விட அஞ்சி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே வைத்துக்கொண்டனர். இந்த நிலையில், இயற்கையிலேயே நல்ல குரல் வளத்துடன் பிறந்ததால் திருமூர்த்தி அந்தக் கிராமத்தில் தனது பாடல்திறன் மூலம் மக்களின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வருகிறார். 

22 வயதான திருமூர்த்தி 200-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைச் சரளமாகப் பாடுவார். திருமூர்த்தி தனது சிறுவயதில் கொட்டாங்குச்சி மூலம் இசை வாசித்துக்கொண்டே பாடத் தொடங்கினார். பின்னர் வீட்டில் உள்ள பாத்திரங்கள், குடம் போன்ற பொருட்களில் இசையை வாசித்து அதற்கு ஏற்றாற்போல் பாடலைப் பாடி வந்தார். இவ்வாறு தனது குரல் வளத்தால் அனைவரையும் ஈர்க்கும் திருமூர்த்தி சில நாட்களுக்கு முன்பு அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலைப் பாடி சமூக வலைதளத்தில் பிரபலமானார். 

சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆன பாடகர் திருமூர்த்தியின் வீடியோவைப் பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் திருமூர்த்தியின் தொடர்பு எண்ணைக் கேட்டிருந்தார். இதனை அடுத்து திருமூர்த்தியை செல்போனில் அழைத்துப் பேசிய டி.இமான், திருமூர்த்திக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன் ஜீவா நடிப்பில் வெளியான சீறு படத்தில் தனது இசையில் செவ்வந்தியே எனும் பாடலைப் பாட வாய்ப்பளித்தார். பாடலும் ஹிட்டாகி வெற்றி பெற்றது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் தனது வீட்டிலேயே திருமூர்த்தி முடங்கிக் கிடந்தார். கடந்த 25-ம் தேதி அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதியானதால் அவர் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஒதுக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை மையத்தில் பெரும்பாலான நேரங்களில் திருமூர்த்தி அங்குள்ள வாட்டர்கேன் மற்றும் பல் துலக்கப் பயன்படுத்தப்படும் பிரஷ் மூலம் இசை அமைத்துப் பாடல்களைப் பாடி அசத்தி வருகிறார். அங்குள்ள கொரோனா பாதித்தவர்கள் திருமூர்த்தி பாடுவதை செல்போனில் படம் எடுத்தும் கைதட்டியும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.