“டிரம்ப் ஒரு பொய்யர்” என்று ஜோ பைடனும், “ஜோ பைடன் ஒரு கோமாளி” என்று டிரம்ப்பும் விமர்சனம் செய்து வருவது, அமெரிக்க அதிபர் தேர்தலை சூடு பிடிக்க வைத்து உள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடை பெறவுள்ள நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்புக்கும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையேயான முதல் விவாத நிகழ்ச்சி காரசாரமாக நடைபெற்றது. இருவரும் நேருக்கு நேராக தொலைக்காட்சி விவாதத்தில் முதல் முறையாக தற்போது பங்கேற்றனர். 

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு மத்தியிலும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி உள்ளதால், கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, “கொரோனா பரவலைக் கையாள அதிபர் டிரம்பிடம் எந்த விதமான திட்டமும் இல்லை” என்றும், ஜோ பைடனு குற்றம் சாட்டி உள்ளார்.

அத்துடன், விமர்சனத்தின் உச்சமாக, “டிரம்ப் ஒரு பொய்யர்” என்றும், ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

இதனைக் கேட்டு அந்த நேரலை நிகழ்ச்சியில் கடும் கோபமடைந்த அதிபர் டிரம்ப், “இந்த கோமாளி எதைப்பற்றிப் பேசுகிறார் என உங்களுக்குப் புரிகிறதா?” என்று பொது மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த ஜோ பைடன், சற்று நிதானத்தைக் கையாண்டார். இதனால், தன் பிரச்சாரத்தைச் சற்று மாற்றி, “கொரோனாவை சமாளிக்க கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தலாம் என்று கூறியவர் டிரம்ப்” என்றும், ஜோ பைடன் சுட்டிக்காட்டி பேசினார். 

சட்டென்று இதற்கு பதில் அளித்த டிரம்ப், “அது கிண்டலுக்காக சொல்லப்பட்டது” என்று, பதில் அளித்தார்.

அப்போது, “முகக்கவசம் அணிவது கொரோனா பரவலைக் குறைக்கும் என்று தொற்று நோய்த் தடுப்பு இயக்குனர் வலியுறுத்தியுள்ள நிலையில், டிரம்ப் ஏன் அதனை அணியவில்லை?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அப்போது, தான் வைத்திருந்த மாஸ்க்கை எடுத்துக் காட்டிய டிரம்ப், “இதனைத் தேவைப்படும் போது அணிந்து கொள்வேன்” என்று, தெரிவித்தார்.

அத்துடன், “மக்களுக்கு சிறந்த மருத்துவ காப்பீடு தர நான் நினைத்தேன் என்றும், கடந்த 47 வருடங்களில் செய்யாததை 47 மாதத்தில் செய்து விட்டேன்” என்றும் டிரம்ப் பெருமையோடு குறிப்பிட்டார்.

அதேபோல், “இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து வர வாய்ப்பு உள்ளது” என்றும், டிரம்ப் தெரிவித்தர்.

மேலும், இந்த விவாதத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆமி கோனி பாரெட் நியமிக்கப்பட்டது குறித்து கருத்துகள் முன் வைக்கப்பட்டது. முக்கியமாக, “தேர்தல் பணி ஆரம்பித்த பின் நீதிபதிகளை நியமிப்பதா” என்று, ஜோ பைடன் கேள்வி எழுப்பினார்.

அப்போது, “கடந்த தேர்தலின் போது, நாங்கள் வெற்றி பெற்றதால் பாரெட்டை நியமிப்பதற்கான அதிகாரம் எனக்கு இருப்பதாக” டிரம்ப் குறிப்பிட்டார். 

அதற்குப் பதில் அளித்துப் பேசிய ஜோ பைடன், “வரும் தேர்தலில் வெற்றி பெறுபவரே நீதிபதியை நியமித்திருக்க வேண்டும்” என்று, கூறினார்.

இதனால், கடும் கோபம் அடைந்த டிரம்ப், “நான் 4 ஆண்டுகளுக்கு அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாகவும், 3 ஆண்டுகளுக்கு அல்ல என்றும் காட்டமாகப் பதில் அளித்தார்.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் அதிபர் வேட்பாளர்கள் இருவரும் நேரடியாக விவாதிப்பது என்பது, காலம் காலமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாகும். 

இதனிடையே, அதிபர் டிரம்ப் - ஜோ பைடன் இடையேயான இந்த நேரலை காட்சிகள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.