2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் காஞ்சனா. தற்போது லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். 

கொரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் சேனலில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். இந்நிலையில் லக்‌ஷ்மி பாம் திரைப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, UAE போன்ற நாடுகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் அக்ஷய் குமார் ரசிகர்கள். 

இந்தப் படத்திற்காக புடவை உடுத்தியது நல்ல அனுபவம் என்று அக்ஷய் குமார் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். புடவை ஒரு நல்ல உடை. எல்லா அளவில் இருப்பவர்களுக்கும் சரியாக இருக்கும். புடவை அணிந்து ஓடும் பேருந்து, ட்ரெய்னில் ஏறும் பெண்களை, தினசரி வேலை செய்யும் பெண்களைப் பார்க்கிறோம். என்னால் புடவையில் நடக்கக்கூட முடியவில்லை. இதை உடுத்திச் சமாளிக்கும் பெண்களுக்கு வாழ்த்துகள். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்கள் புடவை உடுத்திப் பார்த்தால்தான் தெரியும் என்று அக்‌ஷய் குமார் பேசியிருந்தார்.

ஆஜ் என்ற படத்தின் மூலம் 1987-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். சில வருட போராட்டத்திற்கு பிறகு 1992-ம் வெளியான கில்லாடி என்ற படத்தின் மூலம் இவருக்கு ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைத்து என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல் அதிசிறந்த ஸ்டண்ட் கலைஞராகவும் இவர் திகழ்ந்து வருகின்றார். இதுவரை வெளியான அவருடைய படங்களுக்கு டூப் இல்லாமல் இவரே சண்டைகள் காட்சிகளில் நடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. 

சிறந்த ஆக்ஷன் நடிகராக வளம்வரும் இவர் ஆரம்ப காலம் முதலே சிறந்த சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா காலத்திலும் இவர் கோடிக்கணக்கில் அரசுக்கும் பொது மக்களுக்கும் நிதி கொடுத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. 2018ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் என்றபோது இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கிலும் கொரோனா விழிப்புணர்வு குறித்த அரசு விளம்பரங்களில் நடித்தார். 

பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் பெல் பாட்டம். இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் நடிக்கிறார். மேலும் ஹுமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் தலைவாசல் விஜய்யும் நடிக்கிறார். இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் மறக்கப்பட்ட ஒரு ஹீரோவை பற்றிய த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் துவங்கி, நேற்று முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.