கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொழில் துறைகள் முடங்கியுள்ளன. குறிப்பாக சினிமா தொழில் அதளபாதளத்திற்கு சென்றுவிட்டது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டும் திரையரங்குகள் மூடப்பட்டும் ஸ்தம்பித்தது. சினிமா வாய்ப்பை இழந்து பல திரைப்பிரபலங்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட்டது. சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு எனப் பல நிறுவனங்கள் தொழிலாளர்களைப் பந்தாடி வருகின்றன. கிடைக்கிற சம்பளம் போதும் என்ற மனநிலைக்குத் தொழிலாளர்களும் வந்துவிட்டனர்.மற்ற துறைகளைப் போலவே சினிமாவுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பலரும் சினிமாவை மறந்து வேறு தொழிலுக்குச் சென்று வருகின்றனர். 

கேரளாவில் பல நடிகர்கள் மீன், கருவாடு வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகை மஞ்சு பிள்ளை எருமை வியாபாரத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 1990ஆம் ஆண்டுகளில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மஞ்சு பிள்ளை. முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். 

புகழ்பெற்ற மலையாள நடிகர் எஸ்பி பிள்ளையின் பேத்தியான நடிகை மஞ்சு பிள்ளை, சினிமா படங்கள் மட்டுமின்றி டிவி சீரயல்களிலும் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையையும் செய்து வருகிறார் மஞ்சு பிள்ளை. கடந்த 2000-ம் ஆண்டு சுஜித் வாசுதேவ் என்ற கேமரா மேனை திருமணம் செய்து கொண்டார் மஞ்சு பிள்ளை. இவர்களுக்கு தயா பிள்ளை என்ற மகள் உள்ளார்.

அண்மையில் தட்டிம் முட்டிம் என்ற சீரியலில் மோகனவள்ளி கதாபார்த்திரத்தில் நடித்த மஞ்சு பிள்ளையின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தமிழில் ஜோதிகா நடித்த சிநேகிதியே படத்தில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்திலும் நடித்துள்ளார். 

இவருக்குத் திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் என்ற இடத்திற்கு அருகே உள்ள அவனவஞ்சேரி என்ற பகுதியில் பண்ணைத் தோட்டம் உள்ளது. கொரோனா லாக்டவுனால் சினிமா மற்றும் டிவி சீரியல் வாய்ப்புகள் குறைந்ததால் என்ன செய்வது யோசித்தபோது தான் எருமைகளை வாங்கி வளர்த்து விற்பனை செய்யலாம் என இவரது கணவரும், கேமராமேனுமான சுஜித் வாசுதேவன் ஒரு யோசனையை வழங்க, உடனடியாக மஞ்சு பிள்ளையும் களத்தில் இறங்கினாராம். 

நல்ல ரக எருமைகள் எங்குக் கிடைக்கும் என விசாரித்தபோது, ஹரியானா மாநிலத்தில் முரா என்ற உயர் ரக எருமைகள் கிடைக்கும் எனத் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்து முதல் கட்டமாக 50 எருமைகளை வாங்கியுள்ளார் மஞ்சு. தற்போது இந்த எருமை வியாபாரம் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக நடிகை மஞ்சு பிள்ளை கூறுகிறார். 

இவரது பண்ணையில் எருமைகள் மட்டுமில்லாமல், மீன் வளர்ப்பு, காய்கறித் தோட்டம், பழத்தோட்டம் ஆகியவையும் உள்ளன. இனி சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் எனக்குக் கவலை இல்லை, இதுவே போதும் என்கிறார் இவர். வாய்ப்பில்லாமல் போனதால் துவண்டு விடாமல் வித்தியாசமான முயற்சியில் இறங்கிய நடிகை மஞ்சு பிள்ளையையும் அவரது கணவரையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.