இளம் பெண்ணின் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்ததால், அவரது பெற்றோர் மகளை வீட்டை விட்டு விரட்டியடித்த நிலையில், காதலனும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறியதாலும், மனமுடைந்த அந்த இளம் பெண் காதலன் வீட்டு முன் பெண் தீக்குளிக்க பெட்ரோலுடன் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்து உள்ள வாஞ்சியூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் பவித்ரா, அந்த பகுதியில் உள்ள முதுநிலை வணிகவியல் பட்டம் கடந்த ஆண்டு படித்து முடித்துள்ளார். 

இதனிடையே, அங்குள்ள நாலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பவித்ராவை காதலித்து வந்துள்ளார். பதிலுக்கு பவித்ராவும் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இதனால், காதல் ஜோடிகளாக அந்த பகுதியைச் சுற்றி அவர்கள் உலா வந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த காதலன் திருமணம் செய்வதாகக் கூறி, பவித்ராவை ஏமாற்றியதாகத் தெரிகிறது. இதனால், காதலனுடன் பவித்ரா சண்டை போட்டுள்ளார். 

மேலும், பவித்ராவின் காதல் கதை, அவரது பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் தன் மகள் பவித்ராவை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளனர். 

தான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட தகவலையும், பவித்ரா தன் காதலனிடம் கூறியிருக்கிறார். ஆனாலும், காதலன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை பவித்ரா உணர்ந்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு அவர் ஆளாகி உள்ளார்.

இதன் தொடச்சியாக காதலனுக்குப் பாடம் புகட்ட நினைத்த பவித்ரா, காதலன் வீட்டில் தீ குறித்து சாவதற்காக, கையில் பெட்ரோல் பாட்டில் உடன் அழுது கொண்டே கிளம்பி உள்ளார். அப்போது, திருவாரூர் ரோட்டில் உள்ள வேங்கைபுரம் சாலையில் பவித்ரா நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார்.  

இதனை அந்த வழியாக சென்ற மன்னார்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவி வனிதா தனது கணவர் அருள் ராஜனுடன் செல்லும்போது, கவனித்துள்ளார். 

அத்துடன், வண்டியை நிறுத்தி இந்த இளம் பெண்ணிடம் விசாரித்துள்ளார். அப்போது, பவித்ரா தன் காதலானால் ஏமாற்றப்பட்ட கதையைக் கூறி அழுதிருக்கிறார்.

மேலும், “என்னைக் காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுத்து, என் காதலருடன் என்னைச் சேர்த்து வைக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்றும், கூறி அழுதிருக்கிறார். 

இதனையடுத்து, மன்னார்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவி வனிதா அங்குள்ள காவல் நிலையத்திற்கு இளம் பெண்ணின் இந்த செயல் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து, மன்னார்குடி தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அத்துடன், பவித்ராவிடம் விசாரித்து விட்டு, அவர் ஏற்கனவே கொடுத்த புகார் தொடர்பாக விசாரிக்க காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.