டைமிங் காமெடியால் வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைத்தவர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்து வந்த நேரத்தில் சிம்புவின் மன்மதன் படம் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார். ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து, இயல்பான காமெடியால் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சந்தானம் முதன் முதலில் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் மட்டும் சந்தானம் காமெடியனாக நடித்தார். 

கொரோனா போராட்டங்களுக்கு பின்னர் பிஸ்கோத் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட்டது மூலம் 2020 தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார் சந்தானம். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிட்டது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்நிலையில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது. பாரிஸ் ஜெயராஜ் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை A1 புகழ் ஜான்சன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு, துரை ராஜ் கலை இயக்கம், பிரகாஷ் படத்தொகுப்பு மேற்கொள்கின்றனர். கே. குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தை தெறிக்க விடுகிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கிலே கையில் மைக்குடன் அசத்தலாக இருக்கிறார் சந்தானம். சந்தானத்துக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள். இதை தொடர்ந்து கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். சினிஷ் தயாரித்த இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். 

A1 கூட்டணி மீண்டும் இணைவதால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் சினிமா பிரியர்கள். அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஜான்சன் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தற்போது இதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள்.