தமிழ் திரையுலகின் சிறந்த நடிகராகவும், ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..என அவர் கூறியிருக்கிறார். இதனால் மக்கள் அனைவரும் இது பற்றி நிச்சயம் பேச வேண்டும் என்று சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படம் வெளியாகி இன்றோடு 17 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு வெளியான இப்படம், சூர்யாவின் கமர்ஷியல் திரைப்பயணத்திற்கு உதவியானது. மாஸாகவும் கிளாஸாகவும் அன்புச் செல்வன் என்ற ஐபிஎஸ் அதிகாரியை கண்டெடுத்தது.

தமிழ் சினிமாவில் பல காப் ஸ்டோரிகள் வந்திருந்தாலும், இந்த படம் தனி பெயரை சம்பாதித்தது. கெளதம் மேனன் இயக்கியிருந்த இப்படத்தில் சூர்யா ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். பாடல்கள் ஆக்ஷன் காட்சிகள் என காட்சிகளை கச்சிதமாக செதுக்கியிருப்பார் கெளதம். ஹாரிஸ் ஜெயராஜின் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. 

இப்படம் வெளியான தருணத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து விட்டு ஆச்சர்யமடைந்தார். சூர்யாவின் நடிப்பு ரஜினிகாந்தை ஈர்த்தது. இப்படம் குறித்து சூப்பர்ஸ்டார் பேசிய பழைய வீடியோ ஒன்றை ரசிகர்கள் இந்நாளில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பெங்களூரில் மாறுவேடத்தில் சென்று, திரையரங்கில் இந்த படத்தை பார்த்ததாக ரஜினிகாந்த் பேசியிருப்பார். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பணிகள் முடிவடைந்து கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு அருவா, வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது. சூர்யா பிறந்தநாளில் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது குறிப்பிடத்தக்கது.