கொரோனா பரிசோதனை என்ற பெயரில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த லேப் டெக்னீசியன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா என்னும் வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் இந்த சூழலில், அனைத்து தரப்பு மக்ளும் வீடுகளில் முடங்கி உள்ள நிலையில், அனைவரும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இதனால், கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில், சிலர் மட்டும் தான், அவரவர் வீடுகளில் தனிமையில் உள்ளனர்.

எனினும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 

குறிப்பாக, கொரோனா தொற்று நோய்க்கு இடையே, தனிமை முகாமில் இருக்கும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுவதாகச் சமீப காலமாகத் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அத்துடன், வீதிகள் தோறும் கிருமி நாசினி தெளிக்க வந்த ஒருவர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறிச் செயல்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக அதே போல் ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. அதுவும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 

மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பணியாற்றும் 24 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதால், தனக்கும் அது பரவி இருக்குமோ என்ற அச்சத்தில், அங்குள்ள மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய அங்கு அமைக்கப்பட்டிருந்த கொரோனா அவசர சிகிச்சை மையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த லேப் டெக்னீசியன் ஒருவர், “மூக்கு வழியாகச் சளி மாதிரிகளை எடுத்த பின்னர், உங்கள் பிறப்பு உறுப்பிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளதாகத் தெரிகிறது. 

கொரோனா சோதனை எப்படியெல்லாம் மேற்கொள்கிறார்கள் என்பது பற்றித் தெரியாததால், அந்த பெண்ணும் அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, ஆடைகளை இன்றி, அவர் பரிசோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனை குறித்து, தனது சக தோழிகளிடம் அவர் கூறி உள்ளார். இந்த தகவல், குறிப்பிட்ட அந்த பெண்ணின் அண்ணனுக்கும் தெரிய வந்தது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்துக் குறிப்பிட்ட அந்த மருத்துவமனையின் மருத்துவர்களிடம் நேரில் சென்று விசாரித்துள்ளார். 

அங்கு, “கொரோனா பரிசோதனைக்கு மூக்கு அல்லது தொண்டையில் இருந்து மட்டுமே சளி மாதிரிகள் எடுக்கப்படும்” என்று, மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இதனால், தன் தங்கை ஏமாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக உணர்ந்த அவர், இது தொடர்பாக, அங்குள்ள காவல் நிலையத்தில் சம்மந்தப்பட்ட லேப் டெக்னீசியன் மீது புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்ட லேப் டெக்னீசியனை கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதே போல், பரிசோதனைக்கு வந்த வேற யாரிடமும் இதுபோன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா என்றும், அதனை அவர்களுக்கேத் தெரியாமல் அவரது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளாரா என்ற பல்வேறு கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.