ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். 

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் 28-ம் தேதி ரகிட ரகிட பாடல் லிரிக் வீடியோவை வெளியிட்டு அசத்தினர் படக்குழுவினர். இந்த பாடல் ட்ரெண்டாகி பட்டையை கிளப்பி வருகிறது. தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது இப்பாடல். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். தனுஷ், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் படங்களில் வழக்கமாக வரும் சிவப்பு நிற பென்ஸ் கார், இந்த பாடலிலும் வருகிறது. 

தற்போது இந்த பாடலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெர்ஷனை வெளியிட்டுள்ளது CSK அணி. இதை பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஐபில் போட்டிகள் துவங்கும் நேரத்தில் இதுபோன்ற ப்ரோமோஷன் வீடியோக்களை அதிகம் காணலாம். ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு மே 1-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இதன் ரிலீஸ் தேதி தெரியவில்லை. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஜூலை மாதம் முழுவதும் தரமான அப்டேட்டுகளுடன் வரவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.  முதல் பாடலான ரகிட ரகிட பாடல்  குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். 

ஏற்கனவே வெளியான மோஷன் போஸ்டரில் இந்த பாடல் தான் இடம் பெற்றிருக்கும் என்பது கூடுதல் தகவல். சோனி மியூசிக் சவுத் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை கைப்பற்றியுள்ளனர். கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் இப்பாடல் இடம்பெற்றிருப்பது போல் தெரிகிறது.