இந்தியாவில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து இரண்டு நாட்களாகிவிட்டது. இந்த புதிய கல்விக் கொள்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரியச் சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்தை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வருவது போன்ற பல்வேறு திட்டங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து பலர் வரவேற்பைத் தெரிவித்து வந்தாலும், இதில் எந்தவித புதுமையும் இல்லை என்ற கருத்துகள் நிலவுகின்றன.

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ம் ஆண்டு ஜூன் 1ம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறியது. இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில்  அதிக விவாதங்களையும் ஏற்படுத்தியது.

அதேபோல், இந்த புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து இரண்டு நாட்களாகிவிட்ட நிலையில் தமிழக அரசின் நிலைப்பாடு இதில் என்ன என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில், 'வட இந்திய மாணவர்களைவிடத் தமிழக மாணவர்கள் பெற்றுள்ள அந்த வளர்ச்சியின் உயரத்தைச் சிதைத்திடும் நோக்கத்தில், இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முற்படும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, அண்ணாவின் திருப்பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன? 

தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பலி கொடுத்து, தங்களுக்கு மிச்சமிருக்கும் ஆட்சிக்காலத்தை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறதா இந்த அரசு?

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்த நிலையில், அவர்களுக்கும் சேர்த்தே துரோகம் செய்யத் துணிந்து விட்டதா இன்றைய அதிமுக அரசு? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

அதேநேரம், புதிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துவதாக இருந்தாலும் மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் என்ன மொழியில் கற்பிக்கலாம் என்பது குறித்து தாங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேட்டியளித்த ரமேஷ் பொக்ரியால், 'பெரும்பாலான வளர்ந்த நாடுகள் குழந்தையின் ஆரம்ப ஆண்டுகளில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரும் கல்வியில் பங்கேற்கும் வகையில், தாய்மொழியில் குழந்தை படிப்பதை உறுதிசெய்யத் தீவிர முயற்சி செய்துள்ளனர். சிறு பிள்ளைகள் தங்கள் சொந்த மொழி அல்லது தாய்மொழியில் கருத்துகளை மிக விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள்.

இதன் அடிப்படையில்தான் புதிய கல்விக் கொள்கை, சாத்தியமான இடங்களில், குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரை, ஆனால் முன்னுரிமை 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு அப்பால் வரை வீட்டு மொழி, தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழிகளில் கற்பிக்கும் ஊடகமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்கள் அதிகார வரம்பிற்குள் வரும் பள்ளிகளில் கற்பிக்கும் மொழி தொடர்பான முடிவுகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளலாம்' என்று கூறியிருக்கிறார்.