கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 5 மாத காலமாக பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், சுமார் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா என்னும் கொடிய வைரஸ், படிப்படியாக ஒட்டு மொத்த உலக நாடுகளுக்கும் பரவி விரிந்து கிடக்கிறது. 

இந்த கொரோனா பாதிப்பிலிருந்து ஒரு சில நாடுகள் ஓரளவுக்கு மீண்டு இருந்தாலும், பல நாடுகள் தற்போது வரை தத்தளிக்கொண்டு இருக்கிறது. பல நாடுகளில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் உள்ளன.

குறிப்பாக, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒட்டு மொத்த உலக நாடுகள் யாவும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நிலையில், உலக வர்த்தகம் மந்த நிலையை அடைந்துள்ளது. இதனால், தனி மனித பொருளாதார இழப்புகள் அதிகரித்து, அவர்களின் வாழ்வா தாரம் என்பது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, வாழ்வியல் முறையே மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது முதல், அந்தந்த நாடுகள் அடுத்த சில நாட்களிலேயே முழு ஊரடங்கை அமல்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அப்படிதான், கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் கொரோனா என்னும் பெருந் தொற்று பரவித் தொடங்கிய போதே, அந்நாட்டில் முழு ஊரடங்கு போடப்பட்டது. 

மாலவியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக, கடந்த 5 மாதங்களாக அந்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டன. இதனால், அந்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள் யாரும் மூடப்பட்டன. 

இதனையடுத்து, அங்கு தற்போது வரை சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில், பல மாணவிகள் வயது என்பது, வெறும் 10 வயது முதல் 14 வயதுக்குள் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அந்நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை நல ஆர்வலர்கள் தற்போது வெளியிட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். 

குறிப்பாக, “கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் காரணமாக மாலவில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது. இதன் பின்னர் தான், சிறுமிகளாக உள்ள மாணவிகள் பலரும் கர்ப்பம் தரித்து இருப்பது தற்போது அதிகரித்துள்ளது.

முக்கியமாக, மாலவி நாட்டில் உள்ள பலோம்பே நகரில் மட்டும் தற்போதைய இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டும் சுமார் 1000 சிறுமிகள் கருத்தரித்து உள்ளனர்” என்ற தகவலும் வெளியாகி உள்ளதாக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கல்வி தொடர்பான சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் பெனடிக்டோ கோண்டோவ், “கொரோனா நோய் தொற்று நாட்டின் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை மோசமாகப் பாதித்துள்ளதாக” குறிப்பிட்டார்.

மேலும், “இந்த கால கட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை சம்பங்கள், சுரண்டல் மற்றும் இளம் பருவத்தில் உள்ள சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும்” அவர் கவலை தெரிவித்துள்ளார். 

“மாலவி நாட்டில் இதுவரை 3,700 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்” என்றும் அவர் கூறினார்.

அதேபோல், கென்யா நாட்டிலும் இது போன்று ஒரு சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கென்யா நாட்டில், ஜூலை மாத தொடக்கத்தில், கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கையானது அதிகரித்துக் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்தனர்.

அத்துடன், இது தொடர்பாக இதுவரை 150,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யா நாட்டில், ஊரடங்கின் கடந்த 3 மாதங்களில் மட்டும் 152,000 கென்யா சிறுமிகள் கர்ப்பமாகி விட்டதாகவும், இது மாத சராசரியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். 

எனினும், கென்யா நாட்டில் தான், உலகின் மிக அதிகமான சிறுமிகளின் கர்ப்ப விகிதங்களில் ஒன்றாக இருப்பதாகவும், அந்நாட்டில் மட்டும் ஆயிரம் பேரில் 82 சிறுமிகள் கர்ப்பம் தரிக்கின்றனர் என்றும், அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.