திருட்டு டிவிடி மற்றும் விசிடி திரையுலகின் சாபக்கேடாக விளங்கி வருகிறது. முன்பெல்லாம் தியேட்டரில் திரைப்படங்கள் ரிலீஸானதுமே திருட்டு டிவிடி வந்துவிடும். வெளிநாட்டிலிருந்து வந்துகொண்டிருந்தது. தற்போது, தமிழ்நாட்டிலுள்ள தியேட்டர்களில் இருந்தும், திருட்டு டிவிடி வருகிறது. இது ஒரு பெரும் கொடுமையாக, பல ஆண்டுகளாக  திரைத்துறையினரை வாட்டி வதைக்கிறது என்றே கூறலாம். 

கொரோனா காலக்கட்டத்தில், தியேட்டர்களில் திரைப்படங்களை ரிலீஸ் செய்யமுடியாத நிலையில், அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ பிலெக்ஸ் போன்ற  ஓடிடி தளங்களில், தற்போது வெளிவருகின்றன. அப்படித்தான் விஜய்சேதுபதி நடித்த க/பெரணசிங்கம், அக்டோபர் 2-ஆம் தேதி ஜீ பிலெக்ஸ் தளத்தில் வெளியானது. ரிலீஸான 2 மணி நேரத்தில், தமிழ் ராக்கர்ஸில் இத்திரைப்படம் லீக்-ஆக, தயாரிப்பாளர்கள் தரப்பு கொதித்துப்போனது.

அடுத்த அதிர்ச்சியாக, ராஜபாளையத்திலிருந்து விஜய்சேதுபதி ரசிகர்கள், அவரைத் தொடர்புகொண்டு, அண்ணே.. இங்கே கேபிள் டிவியில் விளம்பரம் செய்து, 3-ஆம் தேதியே க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிவிட்டார்கள்.’ என்று கூற, இத்திரைப்படத்தின் இயக்குநர் விருமாண்டியும், வசனம் எழுதிய சண்முகம் முத்துசாமியும், விமானத்தில் பறந்துவந்து,  சட்ட ரீதியிலான நடவடிக்கையில் இறங்கினர். க/பெ ரணசிங்கத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய, உள்ளூர் சேனலான வைமா டிவி அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதன் உரிமையாளரும் பள்ளி நிர்வாகி தலைமறைவாகிவிட்டார்.

விரக்தியான மனநிலையில் பேட்டியளித்த சண்முகம் முத்துசாமி ஜனவரில தயாரான படத்தை..  நாங்க திரையரங்குலதான் வெளியிடணும்ன்னு வச்சிருந்து.. தயாரிப்பாளரோட பொருளாதார நெருக்கடியினால, வட்டி கட்ட முடியாம, இவ்வளவு பிரச்சனையிலதான்.. இந்த படத்த்தை ஓடிடி-க்கு கொடுத்து,  மக்கள் பார்க்கிறதுக்கு  நாங்க ஏற்பாடு பண்ணிருக்கோம். 

இந்த நேரத்துல,  ஒரு முறையில்லாம,  திருட்டுதனமா விசிடி போட்டு,  இவங்க தனியா விளம்பரம் போட்டு காசு சம்பாதிக்கிறாங்க. மக்களே... இவங்களுக்கு ஆதரவு கொடுக்காதீங்க. இது பலபேரோட உழைப்பு.  இன்னும் பலபேர், இந்தப் படத்தோட வெற்றி மற்றும் வருமானத்தை நம்பி இருக்கிறாங்க. நாங்களும் அதை நம்பி தான் இருக்கிறோம். பைரஸிய ஆதரிக்காதீங்க.  பைரஸி ஆக்ட்ல தமிழக அரசே சொல்லிருக்கு.  இந்த மாதிரி திருட்டு விசிடியோ, திருட்டு கேபிளிலோ படம் போட்டா, அவங்க மேல குண்டாஸ் பாயும்ன்னு,  ஒரு சட்டமே இருக்கு.  அதுபடி, காவல்துறை நடவடிக்கை எடுப்பாங்கன்னு நாங்களும் இயக்குனரும் இங்க வந்திருக்கோம்.  

தமிழகத்துல இந்த மாதிரி பைரஸி..  எங்கே நடந்தாலும்,  எங்க கே.ஜே.ஆர். நிறுவனத்தைச் சேர்ந்தவங்களும், இயக்குனர் குழுவும்,  நாங்களும் பிடித்து, நேரடியாக காவல்துறையிடம் ஒப்படைப்போம். மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும். திரையரங்குல பார்க்க வேண்டிய படத்தை, உங்களை நம்பி ஓடிடி-ல கொடுத்திருக்கோம்.  தயவு செய்து அதுல பணம் கட்டி பாருங்க என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான இந்த க.பெ. ரணசிங்கம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களின் அபிமானத்துடன் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விஜய்சேதுபதி ஜோடியாகவும், லீட் ரோலில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, அருண் ராஜா, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.