அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. இதையொட்டி ட்ரம்ப் பிரச்சாரப் பணிகளில் பிசியாக இருந்தார். மேலும், அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. அப்படியான சூழலில்தான், ட்ரம்பிற்கு மிக நெருக்கமான உதவியாளரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று முதலில் உறுதிசெய்யப்பட்டது. இவரும் அதிபர் ட்ரம்பும் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியன்று விமானத்தில் ஒன்றாக பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உதவியாளருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, ட்ரம்ப் உடனடியாக தான் தனித்திருக்க தயாராவதாக அறிவித்தார். தொடர்ந்து, சில மணி நேரத்தில் அதிபர் ட்ரம்பும், அவரது மனைவில் மெலனியாவும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
 
அப்போதுதான் அவருக்கும், அவர் மனைவி மெலனிவாக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று ஃப்ளோரிடாவில் நடைபெறவிருந்த பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு கொரோனா உறுதியானது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பணிகளை உடனடியாக தொடங்க இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இதில் இருந்து மீளுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல தன் உதவியாளருக்கு தொற்று உறுதியானது பற்றி குறிப்பிடும்போது,``சிறிய இடைவெளி ஓய்வு கூட எடுத்துக்கொள்ளாமல் அயராமல் உழைத்து வந்த தனது ஆலோசகர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் குணம்பெற வேண்டுகிறேன் என்று பிரதமர் மோடி நேற்று ட்விட்டர் வழியாக தெரிவித்திருந்தார். இதுகுறித்த ட்வீட்டில், ``எனது நண்பரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் விரைவில் குணம் பெறவும், நல்ல உடல்நலத்துடன் இருக்கவும் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார் மோடி.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுமெனவும், அவர் விரைவில் நலம் பெறுவார் என தான் நம்புவதாகவும் வட கொரிய  அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது முதல் மனைவி மெலானியா ஆகிய இருவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என கிம் ஜாங் உன் அதிபர் ட்ரம்புக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேபோல சீன அதிபர் ஷி ஜின்பிங், ட்ரம்ப் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ளதாக சீன அரசு செய்தி ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்காவிற்கான சீனத் தூதர் குய் தியான்காய் மற்றும் சீன வெளியுறவு அமைச்சகம் ஆகியவை ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி குணமடைய வாழ்த்து தெரிவித்திருந்தது. கொரோனா தொற்று விவகாரத்தில் சீன அரசை ட்ரம்ப் கடுமையாக குற்றம்சாட்டி வரும் நிலையில் சீன அதிபர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில்கூட, ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பென்சில்வேனியாவில், கடந்த மாதம் (செப்டம்பர்) நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ட்ரம்ப், அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்களிடம் கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று அழையுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,“நான் மீண்டும் அமெரிக்க அதிபராகி நாட்டை மீண்டும் வல்லரசாக மாற்றுவேன். சீனா மீதான நம்பகத்தன்மை முடிவுக்கு வரும்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். அது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது. தொடர்ந்து, கொரோனா வைரஸை பரப்பியது சீனாதான் என்பதை நிறுவ முயன்றுக்கொண்டே இருக்கிறார்.