உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. 

தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பேச்சாக தான் உள்ளது. 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 65 லட்சத்தை தாண்டியுள்ளது. தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலகை சேர்ந்தவர்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் தமன்னா வெப் தொடரில் நடிக்க ஹைதராபாத்திற்கு வந்தார். வெப் தொடரில் நடித்து வந்த அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டது.

இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தமன்னா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமன்னா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் அப்பா மற்றும் அம்மாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்த தமன்னா, பெற்றோர் தவிர்த்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததாக கூறினார்.

மீண்டும் ஷூட்டிங்கை துவங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்த நிலையில் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஷூட்டிங்ஸ்பாட்டில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் போதிலும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் தான் தமன்னாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார் தமன்னா. 

கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும், இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை தகர்த்தாலும், இந்த வைரஸ் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு இயல்பு நிலை.