சாதி மறுப்புத் திருமணம் செய்த பெண்ணை சிறைபிடித்து மணமகனை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தால் கோபிசெட்டிபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்து உள்ள அவ்வையார் பாளையத்தைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர், அந்தப் பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.

அப்போது, அதே வங்கியில் பணியாற்றி வந்த அங்கு உள்ள நைனாம் பாளையத்தைச் சேர்ந்த சௌந்திரநாயகி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்து உள்ளார்.

இருவரும் நீண்ட வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்ய நினைத்தனர். அதன்படி, அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் தங்களுடைய காதல் விசயத்தைக் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், பெண் வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கடந்த மாதம் 16 ஆம் தேதி திட்டமிட்ட படியே அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிச் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த தகவல், பெண் வீட்டாருக்கு எப்படியோ தெரிந்த நிலையில், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால், பயந்துபோன காதல் தம்பதிகள் இருவரும் பாதுகாப்பு கேட்டு அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இது குறித்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சனை வரும் என்பதை யோசித்து, இருவரின் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் பேச்சு வார்த்தைக்கு அழைத்து உள்ளனர்.

போலீசாரின் அழைப்பின் பேரில் காதலன் அசோக்கின் பெற்றோர் மட்டும் காவல் நிலையம் வந்து உள்ளனர். ஆனால், காதலி சௌந்திரநாயகியின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு வரவில்லை. இதனையடுத்து, அசோக்கின் பெற்றோரிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் உடனே மணமக்கள் இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, பெண்ணின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி, பெண் வீட்டு உறவினர்கள் அசோக் வீட்டிற்கு வந்து பெண்ணை அழைத்து உள்ளனர்.

இது உண்மை என்று நம்பிய காதல் தம்பதிகள் இருவரும், அசோக்கின் சகோதரர் பரணிதரன் மற்றும் நண்பன் சூர்யா ஆகிய 4 பேருமாகச் சேர்ந்து காரில் புறப்பட்டு நைனாம்பாளையத்திற்கு சென்று உள்ளனர்.

பெண் வீட்டிற்கு சென்ற பிறகு, சௌந்திரநாயகியை பெண் வீட்டார் தனி அறையில் அடைத்து சிறைபிடித்து உள்ளனர். அத்துடன், தன் மகளை சாதி மறுப்புத் திருமணம் செய்த அசோக், அவருடன் வந்த சகோதரர் பரணிதரன், நண்பன் சூர்யா ஆகிய 3 பேரையும் அங்கு கூடியிருந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்த சரமாரியாகத் தாக்கத் தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக அரிவாள், கிரிக்கெட் பேட், கம்பு, அங்கு கிடந்த கட்டை போன்ற ஆயுதங்களால் அவர்கள் 3 பேரையும் பெண் வீட்டார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். அவர்கள் வந்த காரையும் அவர்கள் முற்றிலுமாக அடித்து உடைத்துச் சேதப்படுத்தி உள்ளனர்.

அங்கிருந்து அந்த 3 பேரும் எப்படியோ தப்பி ஓடிவந்து, அங்குள்ள கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குறிப்பாக, சிறையாக்கப்பட்டு உள்ள தனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்றும், அவர் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் 3 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.