ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டெடி. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக காப்பான் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்தது. மகிழ் திருமேனி படத்தின் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். இதுவரை விலங்குகள் திரைப்படங்களில் பேசுவதாக சித்தரிக்கப்பட்டு படங்கள் வெளியான நிலையில் தற்போது டெடி பொம்மை பேசுவதாக வெளியாகி இருந்த டெடி படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது. இதனைத்தொடர்ந்து இந்த லாக்டவுனில் டெடி ஜுக் பாக்ஸ் வெளியானது. 

இந்தப்படம் ஜூன் மாதம் திரையில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், கொரானா வைரஸ் தாக்கத்தினால் இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது என வதந்திகள் கிளம்பியது. இதுகுறித்து டைம்ஸ் நாளிதழுக்கு பேசிய இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன், இந்த படம் தியேட்டரில் தான் வெளியாகும். படத்தின் திரையரங்க விற்பனை ஏற்கனவே நடந்து முடிந்தது. சூழ்நிலை சரியாக அமைந்தால், இந்த வருடமே படத்தை வெளியிட அதிக வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார். 

தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் புதுமைகளை புகுத்தி, படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வரும் இளம் இயக்குனர்களில் இவரும் ஒருவர். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி அதில் வெற்றி பெற்று வந்த சக்தி சௌந்தர் ராஜன் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பெரும்பாலும் காட்டப்பட்டு வந்த ஜாம்பி கதைகளை தமிழில் முதன்முதலில் இயக்கினார். தமிழ்த் திரைப்படத் துறையில் ஜாம்பி மூவி இயக்கிய முதல் இயக்குனர் என்ற பெருமையும் பெற்றார்.

இந்த படத்தை தொடர்ந்து ஆர்யா கைவசம் சல்பேட்டா பரம்பரை திரைப்படம் உள்ளது. பா ரஞ்சித் இயக்கும் இந்த படத்திற்காக உடல் எடையை மாற்றி அசத்தலாக தயாராகி வருகிறார் ஆர்யா. லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.