தருமபுரி அருகே 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இதனிடையே, சிறுமியின் உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த 24 வயதான மூர்த்தி என்பவர், மாணவியின் வீட்டில் நடைபெற்ற ஒரு சுப நிகழ்ச்சிக்காகக் கடந்த ஜூலை 1 ஆம் தேதி வருகை தந்துள்ளார்.

அது முதல் மாணவியிடம் நெருங்கிப் பழக முயன்றுள்ளார். சம்பவத்தன்று, அந்த மாணவியைக் கடைக்கு அழைத்துச் சென்று விட்டு வருவதாகக் கூறி விட்டு, வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகும், அவரும் அந்த மாணவியும் வீடு திரும்பவே இல்லை. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் பல இடங்களில் தேடி உள்ளனர். எங்குத் தேடியும் அந்த மாணவி கிடைக்க வில்லை. இதனால், மாணவி கடத்தப்பட்டிருப்பதை உணர்ந்த மாணவியின் பெற்றோர், அங்குள்ள மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட மாணவியையும், கடத்திச் சென்ற மூர்த்தியையும் வலை வீசி தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும், மூர்த்தி பயன்படுத்திய செல்போன் நம்பரையும் அதிலிருந்து சென்ற அழைப்புகளையும் போலீசார் கண்காணித்தனர். 

அத்துடன், மூர்த்தியை பற்றி அவருடைய நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, மூர்த்தியின் செல்போன் எண்ணைக் கண்காணித்த போது, அவர் சூளகிரி பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பகுதியைச் சுற்றி வளைத்த போலீசார், அதிரடியாக மூர்த்தியை கைது செய்தனர். 

மேலும், அந்த வீட்டில் இருந்த மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து, மூர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், மாணவியை அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். அத்துடன், பாதிப்புக்கு உள்ளான அந்த பள்ளி மாணவியை, தருமபுரியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தற்காலிகமாகத் தங்க வைத்தனர்.

இதனிடையே, 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், தருமபுரி பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.