உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா, இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று காரணமாக தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். பலர் உயிரிழந்து வருகின்றனர். இப்போது இதன் தாக்கம் குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் மக்கள் இன்னும் அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்தத் தொற்று நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் என யாரையும் விடவில்லை. மலையாள நடிகர் பிருத்விராஜ், தமன்னா, ஐஸ்வர்யா ராய், ராஜமவுலி, விஷால், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நிக்கி கல்ராணி, ஜெனிலியா, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர் உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டனர். சமீபத்தில், தெலுங்கு நடிகர், டாக்டர் ராஜசேகர் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார். 

இந்நிலையில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு, கடந்த திங்கட்கிழமை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். ஆச்சாரியா படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பு, முறைப்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த பரிசோதனையின் போது எதிர்பாராதவிதமாக பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. ஆனால் எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 5 நாட்களில் என்னைச் சந்தித்தவர்கள், கொரோனா சோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதனால், அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிரார்த்தனை மேற்கொண்டனர். 

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா டெஸ்ட்டில் தனக்கு நெகட்டிவ் என வந்ததாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் குழு எனக்கு மூன்று வெவ்வேறு சோதனைகளை செய்தது. அதில் எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. முந்தைய முடிவு, RT PCR kit எனும் கொரோனா கிட்டில் ஏற்பட்ட தவறாக இருந்திருக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் காட்டிய அக்கறை மற்றும் அன்புக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சிரஞ்சீவி. இவரது ஆச்சாரியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் அவர் பிறந்தநாளில் வெளியானது. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குனராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின் அதிலிருந்து விடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை சரியானவுடன் ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.