விஷ்ணு விஷால் நடித்த வேலைனு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா பசுபலெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். தொடர்ந்து சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா.

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள லாக்டவுனால் பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர். ரேஷ்மாவும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். ரேஷ்மாவின் போட்டோஷூட் மற்றும் ஒர்க்கவுட் வீடியோவுக்கென ரசிகர் பட்டாளம் உள்ளது. 

இந்நிலையில் சைக்கிளிங் செய்த புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில்  சைக்கிளிங் பயிற்சியை பரப்பியதில் நடிகர் ஆர்யாவுக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஆர்யா பாணியில் ரேஷ்மாவும் சைக்கிளிங் செய்து ஃபிட்டாக திகழபோகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ஒரு கிடாயின் கருணை மனு. விதார்த், ரவீனா, ஜார்ஜ் மரியான் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தார் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தின் வசனங்கள் மற்றும் திரைக்கதை பல்வேறு விருதுகளை குவித்தது. இதனைத்தொடர்ந்து கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் சத்திய சோதனை படத்தை இயக்கி வருகிறார் சுரேஷ் சங்கையா. 

இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ரேஷ்மா. இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் நிறைவு செய்தார் ரேஷ்மா. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஸ்வயம் சித்தா, பிக் பாஸ் ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் மாதவன் வெளியிட்டார். சரண் ஆர்வி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு வெங்கட் எடிட் செய்கிறார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். ரகுராம் இசையமைக்கிறார். சத்திய சோதனை படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிரேம்ஜி தெரிவித்திருந்தார்.