தமிழ் திரையுலகில் மக்கள் விரும்பும் நகைச்சுவை கலைஞனாக திகழ்பவர் சூரி. பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்த இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூரியின் எதார்த்தமான காமெடி பல ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது. விஜய், அஜித், விஜய்சேதுபதி, விஷால் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

தற்போது லாக்டவுன் என்பதால் தனது குடும்பதினருடன் நேரத்தை செலவு செய்து வருகிறார் சூரி.  குழந்தைகளை குளிக்க வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது. அவ்வப்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது என தனது வீடியோக்களை வெளியிட்டு வந்தார் சூரி. மேலும் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருவார். 

இந்த லாக்டவுனில் சூரி செய்த சிறப்பான காரியம் என்னவென்றால், மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியது. லாக்டவுனில் வீட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவுப்படுத்தும் வகையில் சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடல் செய்தது குறிப்பிடத்தக்கது. லாக்டவுனில் தனது கருப்பன் காளையுடன் கம்மாய்க்கரைக்கு செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தினார். அதன் பிறகு ஜிம்மில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் வீடியோவை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இருவரும் ட்ராக்ட்டரில் செல்வது போல் உள்ளது. இந்த வீடியோ இணையவாசிகளை ஈர்த்த வருகிறது. சேங்கை அரசி மவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் பாண்டிராஜ். 

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் சூரி. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களிலும் சூரி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.