தமிழ் திரையுலகில் கமர்ஷியல் சினிமாவுக்கு பெயர் போன இயக்குனர் சுந்தர்.சி. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. தன்னுடைய ஸ்டைலில் காமெடி ஹாரர் திரைப்படமாக இந்த படங்களை இயக்கியிருந்தார். 

இந்நிலையில் தற்போது ஆர்யாவை வைத்து அரண்மனை 3 திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

படத்தில் ஆர்யா, சாக்ஷி அகர்வால், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விவேக்கும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. அதன்பின்னர் கொரோனா மற்றும் ஊரடங்கு அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது.

அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியது படக்குழு. இதற்காக சுமார் 2 கோடியில் பிரம்மாண்டமான முறையில் அரண்மனை போன்ற அரங்கை உருவாக்கி படமாக்கினார்கள். இந்த சண்டைக்காட்சியை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்தார். இதனை தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பொள்ளாச்சியில் நடத்தி முடித்தனர் படக்குழுவினர். 

சமீபத்தில் ஓடிடி வெளியீடாக வந்த ஆர்யாவின் டெடி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அரண்மனை 3 திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கிறார் ஆர்யா. அடுத்த மாதம் கோடை விருந்தாக அரண்மனை 3 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் எனிமி படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா.