சமீபத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவை வந்திருந்தார். அப்போது பாஜக-வினரின் இருசக்கர வாகனப் பேரணிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதியை மீறி பாஜக-வினர் பேரணியாக சென்றனர். 
அந்த பேரணியின் போது, அங்கிருந்து கடைகளை மூடச் சொல்லி தகராறு செய்து கல்வீச்சில் பாஜக-வினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல கட்சிகள் வலியுறுத்தியிருந்தனர். 


இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஆதித்யநாத் வருகையின்போது பா.ஜ.க செய்த அடாவடிகள் கண்டனத்துக்குரியவை.கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக்கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதற்காகத்தான். `கலவர ஸ்பெஷலிஸ்ட்டுகளை’ ஒற்றுமையால் முறியடிப்போம்’’ என்று பதிவிட்டு இருந்தார்.


இதனையடுத்து கோவையில் கல்வீச்சு சம்பவம் நடந்த வி.எம்.காலணியகம் செருப்புக் கடைக்கு நேரில் சென்றார் கமல்ஹாசன். அங்கு செருப்பு வாங்கிவிட்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இதன்பின் பேசிய கமல் ``இரு மதத்தினரிடையே வன்முறையைத் தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள்” என்றார்.